பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்; அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு
விபி-ஜி ராம் ஜி சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், மத்திய அரசு இதை நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 28) தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே பிப்ரவரி 1ம் தேதி 2026- 27ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சினைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதைத் தொடர்ந்து இந்த சட்டம், எஸ்ஐஆர் பிரச்சினை ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. எஸ்ஐஆர் தொடர்பாக ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு விட்டதால், மீண்டும் ஒரு முறை விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
தொடர்ந்து 9-ம் முறை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா
ரும் பிப்ரவரி 1-ம் தேதி 2026- 2027ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்த 2019-ல் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். 2024-ல் அவர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதன் மூலம் தொடர்ச்சியாக 9 பட்ஜெட்களை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெறவுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.