மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைய இது தான் காரணம்! அடித்து சொன்ன டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிசாமியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மனோஜ் பாண்டியன் எதையும் ஆழ்ந்து யோசித்து செய்யக் கூடியவர். அவர் திமுகவில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் இது போன்ற முடிவெடுப்பது துரதிஷ்டவசமானது.
அதிமுகவே தற்போது இல்லை திமுக தான் உள்ளது என சொன்னால், மதுரையில் உள்ள உதயகுமார் கோபித்துக் கொள்வார். எங்களை ஒன்று சேர்க்க நீங்கள் யார்? என்று கேட்பார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், ஒன்றாக இருக்க வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்களாக ஆரம்பிக்கவில்லை. நீங்கள் தான் ஆரம்பிக்க வைத்தீர்கள். செங்கோட்டையன் விவகாரம் இப்போது கொழுந்து விட்டு எரிகிறது. உங்கள் அளவுக்கு எங்களிடம் பணபலம் இல்லை என்றாலும் கூட, உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 100 முதல் 150 ஒன்றிய கவுன்சிலர்கள் எங்களிடம் உள்ளார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வருகிறார்.
கடந்த தேர்தலில் நாங்கள் எம்எல்ஏ ஆகவில்லை எம்பி ஆகவில்லை. அதே போல உங்களாலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தேர்தலுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அந்த பணத்தை எல்லாம் வைத்து தொழிற்சாலை கட்டியிருந்தால் கூட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கலாம். எதிர்க்கட்சி தலைவராவதற்கா இவ்வளவு முயற்சி எடுத்தீர்கள்? இந்த முறை அதுவும் நடக்காது.
தமிழக மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். நீங்களும் திருந்தப் போவதில்லை. அதனால் தான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்து விட்டார். அவரது அப்பா உள்பட புரட்சித்தலைவர் காலத்திலிருந்து அதிமுகவில் இருந்தார்கள். பழனிசாமி நடவடிக்கையால் ஏற்பட்ட மன உளைச்சலில் மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு சென்றிருக்கிறார் என்பது எனது கருத்து.
2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட வாய்ப்புகள் குறைவு. எங்கள் தலைமையில் கூட்டணி அமையுமா? என்றால் அதற்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் அமமுக இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி போன்று பிரமாண்ட கட்சி கூட்டணிக்கு வருகிறது என்று நான் தொண்டர்களை ஏமாற்றமாட்டேன். கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் இருக்கிறது. அதுவும் நிர்வாகிகளின் மன ஓட்டத்துக்கு ஏற்ப முடிவெடுப்பேன்” என்றார்.
கோவை சம்பவம் குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. தற்போது கோவையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருந்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் என்ன? என்பதை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மற்ற கட்சிகள் யோசிக்க வேண்டும்” எனக் கூறினார்.