ஹவுஸ் லோன், பிஸ்னஸ் கடன்.. மொத்தமாக விதிகளை மாற்றிய ஆர்பிஐ.. வெளியான 22 புதிய ரூல்ஸ்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் புரிவதை எளிதாக்குவதற்கும், வங்கிகளின் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவும் வகையில் 22 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த விதிகள் வீட்டு லோன் தொடங்கி பலவற்றில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதிப்படி ஒரு நிறுவனத்திற்கு வங்கி அமைப்பு வழங்கும் ₹10,000 கோடி கடன் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கி சார்ந்த கட்டுப்பாடுகள் தொடரும். அதாவது ஒரு நிறுவனத்திற்கு ஒரு வங்கி ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் கோடி கடன் வழங்க முடியும். வங்கிகள் வேண்டுமானாலும் இதற்கு எதிராக விதி கொண்டு வரலாம். ஆனால் இதுவரை இருந்து வந்த ஆர்பிஐ விதி இனி இருக்காது.
ஒரு வங்கியின் மொத்த கடனில், ஒரு குறிப்பிட்ட கடன் வாங்குபவருக்கு அதன் நிகர மதிப்பில் 20 சதவீதமும், ஒரு குழுமத்திற்கு 25 சதவீதமும் மட்டுமே வழங்க முடியும். கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் துறைகளுக்கான வங்கிக் கடன்கள் 10 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிதி அல்லாத வங்கிகள் (NBFCs) மீதான இடர் எடைகளைக் குறைப்பதன் மூலம் உள்கட்டமைப்பு நிதி செலவைக் குறைக்கவும் மத்திய வங்கி முன்வந்துள்ளது. பங்குகள், ஆரம்பப் பொதுப் பங்குகள் (IPOs) உட்பட, முதலீடு செய்ய கடன் வாங்குபவர்களுக்கான கடன் வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பங்குகளை அடமானம் வைத்து வங்கிகள் வழங்கும் கடன்களின் வரம்பை ₹20 லட்சத்தில் இருந்து ₹1 கோடியாகவும், IPO நிதி வரம்பை ₹10 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாகவும் உயர்த்த ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு நிகழ்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்தச் செயலைத் தொடர்ந்து, பல வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்புள்ளது.
கடந்த மாதம், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும், பல வங்கிகள் இன்னும் இந்த பலனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தவில்லை.
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வங்கிகளை அணுகி, வட்டி குறைப்பின் பலனைப் பெற வேண்டும். இல்லையெனில், கடன் சுமை குறையாமல் போகலாம். வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் எதைக் குறைக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
கடன் வாங்குபவர்களின் விருப்பம் இல்லாமல், வங்கிகள் தானாக முடிவெடுக்கக் கூடாது. HDFC போன்ற சில வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைக் கேட்டு செயல்படுகின்றன. ஆனால், சில வங்கிகள் இன்னும் இந்தத் தெரிவை வழங்கவில்லை. உங்கள் வங்கி EMIயையோ அல்லது கடன் செலுத்தும் காலத்தையோ குறைக்காத பட்சத்தில், உங்கள் கிளையில் ஒரு கடிதம் எழுதி, உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறைக்கக் கோரலாம்.
மொத்தத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த தொடர் ரெப்போ விகிதக் குறைப்பு, வீடு மற்றும் சிறு வணிகக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். வங்கிகள் இந்த பலனை முழுமையாகச் செயல்படுத்தும்போது, மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் சுமை கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது.