"ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை" இந்தி மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் தமிழில் எழுதி இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை’ (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.சிந்து முதல் வைகை வரை என்ற நூலை சுரபி கத்யால், ஜோதி லாவண்யா ஆகியோர் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், ‘சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை’ (Sabhyata Ki Yatra: Sindhu To Vaigai) (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.6) வெளியிட்டார். இதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், இந்தி மொழியின் முன்னணி பதிப்பாளரான வாணி பிரகாஷனும் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள். சிந்து சமவெளி நாகரிகம் விட்ட இடமே தமிழின் சங்கம் தொட்ட இடம் என்பதை இந்த நூலில் ஆர். பாலகிருஷ்ணன் சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி, அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மைய முதல்வர் சரவணன், வாணி பிரகாஷன் பதிப்பகத்தின் முதன்மை செயல் அலுவலர் அதிதி மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.