டெல்லியை திணறடிக்கும் காற்று மாசு! மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) மோசமான மற்றும் மிகவும் மோசமான நிலைக்கு இடையே இருந்தது. இதனால் காலை நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் போன்றவற்றை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. நாட்டின் தலைநகரான இங்கு வாகன புகை, தொழிற்சாலைகள், மருந்துக் கழிவுகள் எரிப்பு மற்றும் பக்கத்து மாநிலங்களில் வைக்கோல்களை கொளுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் மிகவும் மோசமாகி வருகிறது. இதனாலேயே இங்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2018 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து பல ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகளை தற்போது டெல்லி கடுமையாக சந்தித்து வருகிறது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக, கடந்த வாரத்தில் செயற்கை மழையை பொழியச் செய்ய டெல்லி அரசு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் வானிலையில் போதிய ஈரப்பதம் இல்லாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து காற்றில் மாசு அடர்த்தியும் மிகவும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
மோசமாகும் காற்றின் தரம்!
டெல்லியில் மாசு அளவு குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று தர அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இன்று (நவ.6) தேசிய தலைநகரின் காற்றின் தரம் AQI 278 என்ற அளவில் ‘மோசமான’ பிரிவில் இருக்கிறது. அதுவே காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, காலை 9 மணியளவில், டெல்லியின் துவாரகா பகுதியில் AQI 304 ஆக இருந்தது. இது ‘மிகவும் மோசமான’ பிரிவின்கீழ் வகையிடப்படுகிறது. அதுவே, ஓக்லாவில் 263 ஆகவும், சாந்தினி சௌக்கில் 307 ஆகவும், பவானாவில் 344 ஆகவும் இருந்தது.
அதுவே நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளில் AQI 500-க்கும் அதிகமாக, ‘கடுமையான’ பிரிவின்கீழ் பதிவாகி உச்சத்தை தொட்டிருந்தது. இன்றிலிருந்து 8 ஆம் தேதி வரை மாசு அளவுகள் ‘மிகவும் மோசமான’ நிலையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள்!
தொடர்ச்சியான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சுவாச பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு நோயின் தன்மை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பாபி பலோத்ரா கூறுகையில், “தொண்டை எரிச்சல், மூக்கு சளி, கண் அரிப்பு மற்றும் நெஞ்சு வலியால் பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளும் முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்கள் நடைபயிற்சி போன்றவற்றிற்காக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அலுவலக வேலை செய்பவர்கள் வீட்டிலிருந்தே செய்ய முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “இந்த ஆண்டு காற்றின் தரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. அதுவும் இப்போது குளிர்காலத்தின் தொடக்கம் என்பதால் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், தற்காலிக நுரையீரல் நோய் மற்றும் இதயம் தொடர்பான அறிகுறிகள் நிறைய பேரிடம் காணப்படுகிறது” என்றார்.
காற்றின் நிலையை கருத்தில் கொண்டு வெளிப்புற விளையாட்டுகளை தவிர்க்கவும், கடினமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எம்.எல்.மருத்துவமனையின் மருத்துவர் புலின் குமார் குப்தா கூறுகையில், “மருத்துவமனையில் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். குறிப்பாக, சைனசைடிஸ், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளால் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர்” என்றார்.
எனவே வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் போன்றோரும் நீரிழிவு நோய் இருப்பவர்களும், சுவாச பிரச்சினை இருப்பவர்களும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறுவுறுத்தியுள்ளார். அதே போல் ரிக்ஷா மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், வீட்டிற்கு வந்ததும் கைகளையும் முகங்களையும் கழுவ வேண்டும் எனவும் கூறுகிறார்.