மத்திய பட்ஜெட் 2026: தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக தாக்கல் செய்யவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு, வர்த்தகம், பண வீக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டு அமர்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். 2 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 2ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முக்கிய அம்சமாக, 2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை ஜன. 29ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்படி, வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் இந்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த முறை 3 நாட்களுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரானது 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்ற சிறப்பை பெறுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி இருந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நமது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை, பிப்ரவரி மாதம் கடைசி தேதியில் மாலை 5 மணிக்குக்குத்தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு 1999ஆம் ஆண்டு அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றினார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலை மாற்றியமைத்தார்.
தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டானது நமது நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலை வாய்ப்பு, பண வீக்கம், விவசாயம் மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வருகிற நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது 6.8 முதல் 7.2ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றாற்போல் பட்ஜெட்டும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு வருமான வரியில் தளர்வு வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை மாற்றங்கள் இருக்கும் எனவும், வீட்டுக்கடன் மற்றும் உற்பத்தி துறைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெகு வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக் போன்றவற்றின்மீது இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.