4-வது டி20: நியூசி, இந்திய அணிகள் இன்று மோதல்

4-வது டி20: நியூசி,  இந்திய அணிகள் இன்று மோதல்

இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி விசகாப்பட்டினத்​தில் உள்ள டாக்​டர் ஒய்​.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-​விடிசிஏ மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரில் நாக்​பூரில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் 48 ரன்கள் வித்​தி​யாசத்​தி​லும், ராய்ப்​பூரில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், குவாஹாட்டி​யில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் 8 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி வெற்றி பெற்​றிருந்​தது. இதன் மூலம் தொடரை 3-0 என இந்​திய அணி தன்​வசப்​படுத்​தி​யிருந்​தது.

இந்​நிலை​யில் 4-வது ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் இன்று இரவு நடை​பெறுகிறது. 3-வது போட்​டி​யில் 154 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்​திய அணி 10 ஓவர்​களில் வெற்றி கண்​டிருந்​தது. தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 68 ரன்​களை விளாசி மிரட்​டி​னார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 26 பந்​துகளில் 56 ரன்​கள் விளாசி​யிருந்​தார். இஷான் கிஷனும் தனது பங்​குக்கு 13 பந்​துகளில் 28 ரன்​கள் சேர்த்திருந்​தார்.

இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்​திறன் வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் நடப்பு தொடரில் இது​வரை பெரிய அளவில் ரன்​கள் குவிக்​க​வில்​லை. அவர் முறையே 10, 6, 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்து இருந்​தார். டி 20 உலகக் கோப்பை நெருங்கி வரு​வ​தால் அவரது பார்ம் கவலை அளிக்​கும் வகை​யில் உள்​ளது.

தற்​போது நியூஸிலாந்​துக்கு எதி​ரான தொடரை வென்​று​விட்​ட​தால் இன்​றைய ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் எந்​த​வித நெருக்​கடி​யும் இல்​லாமல் விளை​யாட முடி​யும். இதனால் அவர், பார்​முக்கு திரும்​புவதற்கு இன்​றைய ஆட்​டத்தை சிறந்த முறை​யில் பயன்​படுத்​திக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும்.

இதுஒரு​புறம் இருக்க இந்​திய அணி​யின் பிர​தான சுழற்​பந்து வீச்​சாளர்​களான குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் நடப்பு தொடரில் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்படுத்​தாதது சுணக்​கத்தை ஏற்​படுத்தி உள்​ளது. இடது கை சுழற்​பந்து வீச்​சாள​ரான குல்​தீப் யாதவ் 3 ஆட்டங்களிலும் கூட்​டாக 3 விக்​கெட்​களை மட்​டுமே கைப்​பற்றி உள்ளார். அதேவேளை​யில் ஓவருக்கு சராசரி​யாக 9.5 ரன்​களை தாரை​வார்த்​துள்​ளார்.

குவாஹாட்டி போட்​டி​யில் 3 ஓவர்​களை வீசி 32 ரன்​களை வழங்​கி​யிருந்​தார். எனினும் அந்த ஆட்​டத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ரா, ரவி பிஷ்னோய், ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் நேர்த்​தி​யாக செயல்​பட்​ட​தால் நியூஸிலாந்து அணியை 153 ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்த முடிந்​தது. குல்​தீப் யாதவ், சமீபத்​தில் முடிவடைந்த ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரிலும் கவனம் ஈர்க்​கத் தவறி​யிருந்​தார். அந்​தத் தொடரில் அவர், ஓவருக்கு சராசரி​யாக 7.28 ரன்​களை விட்டுக்​கொடுத்​திருந்​தார்.

அதேவேளை​யில் 3-வது ஆட்​டத்​தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த வருண் சக்​ர​வர்த்தி முதல் இரு ஆட்​டங்​களி​லும் கூட்டாக 8 ஓவர்​களை வீசி 72 ரன்​களை வழங்கி 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யிருந்​தார். ஓவருக்கு சராசரி​யாக 9 ரன்​களுக்கு மேல் வழங்​கி​யிருந்​தார். முக்கிய​மான தருணங்​களில் வருண் சக்​ர​வர்த்தி மாயாஜாலங்​கள் நிகழ்த்​த​வில்​லை. எப்​போதுமே நடு ஓவர்களில் திருப்​பு​முனையை ஏற்​படுத்​திக் கொடுக்​கும் அவரிடம் இருந்து மேம்​பட்ட திறன் வெளிப்​பட​வில்​லை.

இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கும் பட்​சத்​தில் வருண் சக்ர​வர்த்தி பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். இது ஒரு​புறம் இருக்க டி 20 உலகக் கோப்பை தொடருக்கு புத்​துணர்ச்​சி​யுடன் இருக்​கும் வகை​யில் இன்றைய ஆட்​டத்​தில் குல்​தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்​படக்​கூடும். இது நிகழும் பட்​சத்​தில் வருண் சக்ர​வர்த்​தி, ரவி பிஷ்னோய் ஜோடி இணைந்து நியூஸிலாந்து அணிக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

ரவி பிஷ்னோய் கடந்த ஆட்​டத்​தில் 4 ஓவர்​களை வீசி 18 ரன்களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யிருந்​தார். அக்​சர் படேல் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வது சந்​தேகமே. இதே​போன்று ஜஸ்​பிரீத் பும்ராவுக்​கும் இன்​றைய ஆட்​டத்​தில் ஓய்வு கொடுக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி ஆறு​தல் வெற்​றியை பெற முயற்​சிக்​கக்​கூடும். பேட்டிங்கை பலப்​படுத்​தும் வகை​யில் டேரில் மிட்​செல் இன்​றைய ஆட்​டத்​தில் டாப் ஆர்​டரில் களமிறக்​கப்​பட வாய்ப்​பு உள்​ளது.

நேரம்​: இரவு 7

நேரலை: ஸ்​டார்​ ஸ்​போர்​ட்​ஸ்,

ஜியோஸ்டார் செயலி