ஓஎன்ஜிசி தளத்தில் பயங்கர தீ விபத்து; 500 தென்னை மரங்கள் எரிந்து நாசம்

ஓஎன்ஜிசி தளத்தில் பயங்கர தீ விபத்து;  500 தென்னை மரங்கள் எரிந்து நாசம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ONGC) தளத்தில் இருந்து வாயு கசிந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக எழுந்த ராட்சத தீப்பிழம்பு வானில் 100 அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்ததில் 500 தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின.

ஆந்திரப் பிரதேச மாநிலம், கொனசீமா மாவட்டத்தில் அமைந்துள்ளது இருசுமண்டா கிராமம். இந்த கிராமப்புற பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. வழக்கம்போல் இன்றும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது பணியை மேற்கொண்டிருந்தனர்.

அ்ப்போது மதியம் 12:30 மணியளவில் எதிர்பாராதவிதமாக எரிவாயு எடுக்கும் தளத்தில் இருந்து இயற்கை எரிவாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ராட்சத தீப்பிழம்பு 100 அடி உயரத்துக்கு ஜுவாலைவிட்டு எரிந்ததாகவும், இந்த தீ அருகில் இருந்த தென்னந்தோப்புக்கும் பரவியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் பதற்றத்துடன் தெரிவித்தார்.

தகவலறிந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் உரிய பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டதுடன், உள்ளூர்வாசிகளை பாதுகாப்பு கருதி கிராமத்தை விட்டு வெளியேற்ற செய்தனர்.

அதேசமயம், ஓஎன்ஜிசி பணியாளர்களுடன் இணைந்து தீயணைப்புப் படை வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அந்த தொகுதியின் நாடாளுமன்ற
உறுப்பினர் என முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து களநிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி அவர்களின் வசிப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் இருந்த 500 தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியதாக தெரிவித்துள்ள வருவாய்த் துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் இருந்த இறால் பண்ணைகளும் அழிந்திருக்கக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கிராமங்களில் மின்சாரம், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை தற்காலிகமாக பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

தீ விபத்து குறித்து மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் அச்சன்நாயுடு, சுபாஷ் ஆகியோர் சம்பவம் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் விளக்கினர். அப்போது இருசுமண்டா கிராம மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாதவாறு அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்ட சந்திரபாபு நாயுடு, மாவட்ட அரசு அதிகாரிகளும் , ஓஎன்ஜிசி அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும்படியும் அறிவுறுத்தினார்.