ராமேசுவரம் - திருவனந்தபுரம் இடையே அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கியது

ராமேசுவரம் - திருவனந்தபுரம் இடையே அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கியது

ராமேசுவரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயில் புதிய சேவை, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது.

கேரள மாநிலத்திற்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இருந்த வந்த நிலையில், ரயில்வே வாரியம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரையிலும இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க அனுமதி வழங்கியது.

இதனடிப்படையில், ராமேசுவரம் - திருவனந்தபுரம் இடையான அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 1.30 மணி அளவில் புறப்பட்ட அமிர்தா விரைவு ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் அம்ரிதா விரைவு ரயில் மறுநாள் மதியம் 12.45 மணிக்கு ராமேசுவரத்திற்கு வந்தடையும். ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமிர்தா விரைவு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து ரயில் பாஜக சார்பாக ரயில் ஓட்டுநர்களுக்கு மாலைகள், சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் ராமநாதசாமி திருக்கோயிலில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்கள் அடங்கிய புனித நீர் பாட்டில்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அதுபோல ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தலைமையில் பரமக்குடி ரயில் நிலையத்தில் அமிர்தா விரைவு ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.