'ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்' - சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை கோரி மனு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபகாலமாக என் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரது யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும், ரூ.25 லட்சம் தருமாறும் மிரட்டினார். தவறினால், என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தனது யூடியூப் சேனல் மூலமாக ஒளிபரப்பப்படும் எனக் கூறினார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை கோரி அளித்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "மனுதாரர் ராதாகிருஷ்ணன் அளித்த புகார் மனுவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முறையாக விசாரித்து முகாந்திரம் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.