மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு பைபர் படகுகளில் சென்ற மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுக்குட்டி. இவர் தனக்கு சொந்தமான IND-TN-16-MO-519 என்ற பதிவு எண் கொண்ட பைபர் படகில் குமார், ரீகன் மற்றும் புதுப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த அன்புராஜ், பழையார் கெளசிகள் ஆகியோருடன் கோடியக்கரையில் இருந்து நேற்று பிற்பகல் மீன் பிடிக்கச் சென்றார்.
இதே போல் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த முபின்தாஸ் என்பவருக்கு சொந்தமான IND-TN-16-MO-2070 என்ற பதிவு எண் கொண்ட பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு, மதன், ராமலிங்கம் மற்றும் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் ஆகிய நான்கு பேரும் கோடியக்கரையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் அனைவரும் கோடியக்கரையில் இருந்து தென் கிழக்கே 30 கடல்மைல் தொலைவில் உள்ள அனலைத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாதகக் கூறி 9 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.