இரண்டாவது டி20: சூர்யகுமார், இஷான் கிஷன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி

இரண்டாவது டி20: சூர்யகுமார், இஷான் கிஷன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி

 நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டி சத்தீஸ்கரின் நியூ ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ரானா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டெவான் கான்வே 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டிம் செய்ஃபெர்ட்டும் 24 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

அதேசமயம் மறுமுனையில் விளையாடி வந்த கிளென் பிலீப்ஸ் 19 ரன்களிலும், டேரில் மிட்செல் 18 ரன்களிலும், மார்க் சாப்மேன் 10 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ரச்சின் ரவீந்திராவும் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் - ஜக்காரி ஃபால்க்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இறுதிவரை களத்தில் இருந்த மிட்செல் சாண்ட்னர் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 47 ரன்களையும், ஜக்காரி ஃபால்க்ஸ் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 15 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் தூபே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு அதிரடி வீரர் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 76 ரன்களில் இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் அதிரடியாக விளையாட இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.

மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 82 ரன்களையும், ஷிவம் தூபே ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.