கீழடி அகழாய்வு முடிவை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் எம்பி பகிரங்க குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு முடிவை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அரசு - சு.வெங்கடேசன் எம்பி பகிரங்க குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாமல் அதன் முடிவை ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்வதாக சு. வெங்கடேசன் எம்.பி குற்றம்சாட்டி உள்ளார்.

மதுரையில் நடைபெற்று வரும் சர்வதேச தொல்லியல் கருத்தரங்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி பங்கேற்றார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''இந்திய வரலாற்றை மறுபரிசீலனை செய்யக்கூடிய ஆய்வுகள் தமிழ்நாட்டில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் 124 காலக்கணக்கீடுகள் மெய்பிக்கப்பட்டுள்ளன. இதனை உலக அறிவு சமூகத்தின் முன்பு வைக்கும் திருநாள் இது.

கீழடி அகழாய்வு முடிவை இருட்டடிப்பு செய்யும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது. துவாரகையிலும், அரியானாவில் சிந்து நதியை கண்டுபிடிக்கவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாகர்கிராம் என்ற இடத்தில் அஸ்வமேத யாகம் நடந்ததாக சொல்லப்படும் இடத்திலும் ஆய்வு செய்வதாக சொல்கிறது இந்திய தொல்லியல் துறை.

ஆனால், கீழடி அகழாய்வை வெளியிட மறுப்பது ஏன்? அறிவியல் முடிவுகளை வைத்துக்கொண்டு அறிவியல் மனப்பான்மை இல்லாத பழமைவாதிகளுடன் போராடி கொண்டிருக்கிறோம். வளமான தமிழ்நாட்டில் இந்திய தொல்லியல் துறை ஒரு இடத்தில் கூட ஆய்வு செய்யவில்லை," என்றார்.

தொல்லியல் கருத்தரங்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி
தொல்லியல் கருத்தரங்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி

வேத பண்பாடு தான் இந்திய பண்பாடு என நிறுவ முயல்கிறார்கள். வேதங்கள் உருவாகும் முன்னரே செழித்தோங்கிய பண்பாடு தமிழ்நாட்டில் இருந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி கீழடி அகழாய்வு முடிவை வெளியிட தயாரா? கீழடி விவகாரத்தில் திட்டமிட்ட இருட்டடிப்பை ஒன்றிய அரசு செய்கிறது.

மோடி பிரதமராக இருக்கலாம். அதற்காக சூரியன் எழுகிற திசை மேற்கு என்றால் ஏற்க முடியுமா? சட்டசபை தேர்தல் வந்தவுடன் தமிழ்நாடு பற்றி மோடிக்கு நிறைய ஞாபகம் வெளியே வரும். அவரால் தமிழ்நாட்டில் 10 இடங்களில் அகழாய்வை மேற்கொள்வோம் என சொல்ல முடியுமா?'' என்று சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.