காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

காவல் ஆய்வாளர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்தால் எவ்வாறு நீதி கிடைக்கும்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மதுரை: மதுரையில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில், சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர்.

மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (30). கடந்த 9ஆம் தேதி அதிகாலை, அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ஃபிளவர்ஷீலா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது, காவல் நிலையத்தில் இருந்து அவர் தப்பியோடியதாகவும், பின்னர் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக அவர் மீட்கப்பட்டதாகவும் அண்ணாநகர் போலீசார் தினேஷ்குமாரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பட்டியலின இளைஞரான தினேஷ்குமார் உயிரிழந்த விவகாரத்தில் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தினேஷ்குமார் குடும்பத்தினரும், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தினேஷ் குமாரின் தாயார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா? என கேள்வியெழுப்பினர்.

மேலும், காவல் நிலைய ஆய்வாளர் பிளவர்ஷீலா மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையமே விசாரணை செய்தால் எவ்வாறு நீதி கிடைக்கும்? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வழக்கை சிபிசிஐடி புலனாய்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர்.

அதுமட்டுமின்றி, காவல் ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று கையில் எடுத்த சிபிசிஐடி அதிகாரிகள், தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், இந்த வழக்கில் தொடர்புடைய அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலாவை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.