போலீஸ் ஆர்டர்லிகளை திரும்பப் பெறுங்கள்: காவல்துறைக்கு டிஜிபி அதிரடி உத்தரவு
தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு தமிழக டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் வேலையாட்களை போல கான்ஸ்டெபிள் நிலையில் இருக்கும் போலீசார் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு உயரதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்க்கும் காவலர்கள், ஆர்டர்லி என அழைக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 8 ஆயிரம் போலீசார், ஆர்டர்லிகளாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழித்து, ஆர்டர்லி போலீசாரை வழக்கமான காவல் பணிக்கு அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக டிஜிபி (பொறுப்பு)அபய்குமார் சிங் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், தற்போது பணியில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக பணியாற்றும் காவலர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர்களின் விவரங்களை தொகுத்து, அவரவர் பணியாற்றும் பிரிவுகளில் பணிக்கு அனுப்ப வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள், உயரதிகாரிகளின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றி வரும் ஆர்டர்லிகளை படிப்படியாக திரும்ப பெற்று வருகிறோம். இந்த பணியில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி ஈடுபட்டு வருகிறார் " எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவலர்கள் மற்றும் சிறைக் காவலர்களை தங்கள் வீட்டு தனிப்பட்ட வேலைகளுக்காக காவல்துறை உயரதிகாரிகள் ஈடுபடுத்தக் கூடாது என்றும், உடனடியாக இந்த ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்தான், ஆர்டர்லிகளாக பணியாற்றுபவர்களை திரும்பப் பெற்று, அவர்களை வழக்கமான பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவலர் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு தமிழக பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.