இனி சாலையோர பிரச்சாரத்திற்கு.. எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தெளிவாக சொன்ன தமிழக அரசு

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு இப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. அப்போது தமிழக அரசு சார்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் புதிதாக இனி கூட்டங்கள் நடந்த அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் வாரவாரம் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். அதன்படி கடந்த வாரம் அவர் கரூருக்கு பிரச்சாரத்திற்குச் சென்ற நிலையில், அப்போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக இப்போது தமிழ்நாடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் கடந்த திங்கள்கிழமை சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், நீதிபதி அப்போது வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டனர். கோரிக்கைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
மொத்தம் 7 வழக்குகள் தொடரப்பட்டன நிலையில், இன்று அவை விசாரணைக்கு வந்தன. வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மட்டும் மாற்ற முடியும் என்றும் விசாரணை இப்போது தொடக்கக் கட்டத்திலேயே இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் புதிதாக இனி சாலையோரப் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்த அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. SOP, அதாவது விரிவான விதிகள் வகுக்கப்படும் வரை சாலைகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படாது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் ஏற்கனவே அனுமதி வாங்கப்பட்ட கூட்டங்களுக்குத் தடை இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது.