'தரங்கம்பாடியில் 8 அடி உயரத்துக்கு கடல் சீற்றம்' - அரசு மருத்துவமனையில் குளம் போல் தேங்கிய மழைநீர்

'தரங்கம்பாடியில் 8 அடி உயரத்துக்கு கடல் சீற்றம்' - அரசு மருத்துவமனையில் குளம் போல் தேங்கிய மழைநீர்

புயல் காரணமாக தரங்கம்பாடி கடற்கரையில் 8 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பியதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் தற்போது இலங்கை முழுவதும் அதிகனமழை பெய்து வரும் நிலையில் புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இங்கும் மழை அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல் காரணமாக கடற்கரைகளில் 11 அடி வரை அலைகள் எழும்பும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எச்சரித்து இருந்தார். இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி வாழ் மக்கள் கடலோர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தரங்கம்பாடியில் தற்போது கடல் சீற்றமானது அதிகரித்து காணப்படுகிறது.

தரங்கம்பாடி கடற்கரையில் கடல் அலைகள் கரையில் கொட்டி உள்ள கருங்கற்களையும் தாண்டி சுமார் 8 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் ஆர்ப்பரித்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி சுற்றுலா மையம் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மழை அவ்வப்போது மிதமான மழையாகவும், கன மழையாகவும் நீடித்து வருகிறது.

மேலும், தரங்கம்பாடியில் தாழ்வாக உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று சிகிச்சை பெற வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் அவதி அடைந்தனர்.

மேலும், பேரூராட்சி நிர்வாகம் வடிகாலை சீரமைத்து மழை நீரை அகற்றி வரும் காலங்களில், மழை நீர் தேங்காதவாறு அரசு மருத்துவமனை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்றும், வடிகால்களை தூர்வாரி நிரந்தரமாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.