பார்வை மாற்றுத்திறனாளிகளும் அறிவியல் அற்புதங்களை உணர முடியும்... சென்னை ஐஐடியின் புதிய முயற்சி!

பார்வை மாற்றுத்திறனாளிகளும் அறிவியல் அற்புதங்களை தொட்டு உணரும் வகையில் அறிவியல் அணுகல் கூடத்தை சென்னை ஐஐடி அமைத்துள்ளது. இதனை திறந்து வைத்து பார்வையிட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மையம் (Accessibility Research Centre) தமிழ்நாடு அறிவியில் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து பார்வை மாற்றுத்திறனாளிகளும் அறிவியல் தொழில்நுட்பத்தைத் தொட்டு உணரும் வகையில் 3D அரங்கம் ஒன்றை அமைத்துள்ளனர்.
சென்னை பிர்லா கோளரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், பார்வை மாற்றுத்திறனாளிகள் அறிவியலை தொட்டு உணரும் வகையில் உலக வரைபடம், கடலில் வாழும் உயிரினங்கள், கடல் பாறைகள், எரிமலை போன்ற அறிவியல் தொடர்பானவை 3D வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் தொட்டு உணர்ந்து கொள்ளும் வகையில் எழுத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிவியல் அணுகல் கூடத்தை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் கோவிந்தராஜ், உயர் கல்வித் துறை செயலாளர் சங்கர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சண்முகசுந்தரம், சென்னை ஐஐடி பேராசிரியர் ஹேமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், “அறிவியல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு மிகவும் அருமையாக உள்ளது. இதே போன்ற ஆய்வுக் கூடங்கள் நிறைய அமைக்க வேண்டும். அதில் சுற்றுச்சூழல் பாதிப்புகள், தட்ப வெட்பநிலையால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை பார்வை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய சென்னை ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திரன், “பார்வை மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களின் உதவியுடன் ஆய்வகங்களை பார்வையிட வேண்டும். ஆனால், அவர்கள் தானாகவே தொட்டு உணரும் வகையில் தற்பொழுது 3D வடிவில் வடிவமைத்துள்ளோம். இதனைத் தொடர்ந்து பிற இடங்களிலும் அறிவியல் அணுகல் கூடங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.