திருடிய வீட்டில் ஆனந்த குளியல் போட்ட திருடன்... வளைத்து பிடித்த போலீஸ்
திருடச் சென்ற வீட்டில் சாவகாசமாக குளித்து விட்டு, மாற்று உடையை திருடி போட்டுக் கொண்டு தலைமறைவான இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரம் அருகே உள்ள மேலபாளமடை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி அருணா (46). கட்டுமானத் தொழிலாளி. இவரது கணவர் முருகன் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார். இன்னொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் அருணாவும், அவரது மகளும் ராஜவல்லிபுரம் வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 11 ஆம் தேதி அருணா வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டார். அவரது மகளும் கல்லூரிக்குச் சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் அன்றாட வேலைகளை பார்த்துள்ளனர். மறுநாள் காலையில் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் மகளின் கல்லூரி பீஸ் கட்ட வைத்திருந்த ரூ.3,000 மாயமாகி இருந்தது. இதனால் அருணா அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் அருணாவின் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தனர். அப்போது அன்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பவர், மேலாடை இல்லாமல் அருணாவின் வீட்டின் மாடி வழியாக அத்துமீறி உள்ளே நுழைந்தது கேமிராவில் பதிவாகி இருந்தது.
மேலும், அந்த இளைஞர் வீட்டின் வெளிக்கதவை இரும்பு கம்பியால் அடைத்து விட்டு, ஆனந்த குளியல் போட்டுள்ளார். பின்னர் ஆடையின்றி வீட்டுக்குள் சுற்றித் திரிந்து சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்துள்ளார். பின்னர் அருணாவின் மகனுடைய சட்டையை திருடி போட்டுக் கொண்டு, பின்னர் பீரோவை திறந்து, அதில் இருந்த ரூ.3000 திருடி தப்பியோடியதும் தெரிய வந்தது.
இந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருணாவின் உறவினர்கள் அது குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், அருணா அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீடுபுகுந்து திருடிய சுரேஷை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் சுரேஷ் மேலபாளமடை பகுதிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், திருடச் சென்ற இடத்தில் ஆனந்த குளியல் போட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.