'அவதார்' உடன் எங்கள் திரைப்படத்தை ஒப்பிடாதீர்கள் - சண்முக பாண்டியன்
'அவதார்' உடன் எனது 'கொம்புசீவி' திரைப்படத்தை ஒப்பிடாதீர்கள் என நடிகர் சண்முக பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடித்த 'கொம்புசீவி' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் சண்முக பாண்டியன், அவரது சகோதர் விஜய பிரபாகரன் மற்றும் தாயாரும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பார்த்தனர்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன் சிறப்பாக நடித்திருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு தரமான படம் வெளியாகி இருக்கிறது. சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் காமெடியில் கலக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இளமையான இசையில் இளையராஜா, அம்மா பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். திரைப்படத்தில் பல இடங்களில் கேப்டன் விஜயகாந்த்தை பார்ப்பது போல் இருந்தது" என்றார்.
திரைப்படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் கூறுகையில், "இந்த திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் திரைப்படத்தை பார்க்கின்ற எண்ணத்தை பொதுவாக ரசிகர்கள் விரும்புவதில்லை என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதில் இருக்கக் கூடிய காணொளியின் தரமானது சரியாக இருக்காது என மக்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில் திருட்டுத்தனமாக இணையத்தில் படம் பார்ப்பதை பொதுமக்கள் விரும்புவதில்லை.
மேலும் அவதார் திரைப்படம் வெளியான அதே நாளில் எங்களது 'கொம்புசீவி' திரைப்படமும் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அவதார் உலகளாவிய திரைப்படம். எங்களுடைய 'கொம்புசீவி' உள்ளூர் திரைப்படம். இரண்டையும் ஒப்பீடு செய்வது தவறானது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 'கொம்புசீவி' திரைப்படம் பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூறுகையில், "இந்த திரைப்படத்தில் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிகர் சண்முகபாண்டியனை பார்ப்பது விஜயகாந்தை நேரில் பார்ப்பது போலவே இருந்தது. யுவன் சங்கர் ராஜா இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார். நாயகியும் திறமையாக நடித்திருக்கிறார். 'கொம்புசீவி' திரைப்படம் நிச்சயமாக வெற்றி படமாக அமையும்" என்றார்.