போலி நகை கொடுத்து மோசடி - பெண்ணை அடித்து கொன்ற அடகு கடைக்காரர்
கோயம்புத்தூரில் போலி நகைகளை கொடுத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற அடகுக் கடைக்காரர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர், ரத்தினபுரி ஜி.பி.எம் நகரை சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர், சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை மற்றும் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். கடந்த 8 ஆம் தேதி ராஜாராம் அடகு கடையில் இருந்த போது, 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து மோதிரம் ஒன்றை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
அவரிடம் அடகு கடை உரிமையாளர் ராஜாராம் விசாரித்த போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனது பெயர் சுமதி என்றும், சின்ன மேட்டுப்பாளையத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மறுநாள் மீண்டும், அதே பெண் கடைக்கு வந்து தன்னுடைய ஜவுளித் தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாக கூறி, வளையலை அடகு வைத்து ரூ.32 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் கடந்த 12 ஆம் தேதி வந்த அந்தப் பெண் தனக்கு அவசரமாக பணம் தேவை எனக் கூறி நகைகளை கொடுத்து ரூ.75 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேகமாக சென்று விட்டார். இவ்வாறாக சுமதி மொத்தம் ரூ.1.37 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராஜாராம் அவர் கொடுத்த நகைகளை எல்லாம் சோதனை செய்து பார்த்த போது அவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாராம் சுமதியை தேடினார். அவர் கொடுத்த முகவரிக்கு சென்று விசாரித்த போது போலியான முகவரி என்பது தெரிந்தது. இது குறித்து நண்பர்கள் சிலரிடம் ராஜாராம் கூறி அந்த பெண்ணை தேடி வந்தார். இந்நிலையில் அதேப்பெண் கடந்த 17 ஆம் தேதி மீண்டும் போலி நகையை அடகு வைக்க ராஜாராம் கடைக்கு வந்துள்ளார்.
இது நாள் வரை தேடிக் கொண்டு இருந்த பெண் தன்னைத் தேடி வந்ததால் அவரை மடக்கி பிடித்த ராஜாராம் தனது நண்பரான மகேந்திரன் உள்பட சிலருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்து கடைக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த அவர்கள் இரவு 9 மணியளவில் அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணை கடைக்கு பின்னால் அத்திப்பாளையம் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பைப் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெண் அதே இடத்தில் மயங்கி விழுந்து, உயிரிழந்துள்ளார். இதையடுத்து நகை அடகு கடையின் உரிமையாளரான ராஜாராம் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்து, வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதன் பின்னர் சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமதியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி சுதா (39) என்பதும், கணவரைப் பிரிந்து வசித்து வந்த சுதா ஜவுளி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கொலையில் தலைமறைவாக உள்ள மகேந்திரன் உள்ளிட்ட மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.