வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்: முதல்வர் வேண்டுகோள்
ஈரோடு அருகே சோலாரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.74.90 கோடியில் கட்டப்பட்ட ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ. 605.44 கோடி மதிப்பில் 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த ஆண்டு ஈரோடு அரசு நிகழ்ச்சியில் நான் அறிவித்த 12 அறிவிப்புகள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன் என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி என சொல்லலாமே தவிர, அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும். நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான, தமிழகத்தின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிராகரித்துவிட்டது.
பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கவேண்டும் என பிரதமர் மோடியிடம் சொல்லி இருக்க வேண்டும். டெல்லியில் பல கார்களில் மாறி மாறிச் சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே? தமிழக விவசாயிகளுக்காக, பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள், தமிழக அரசு சார்பில், உங்களுக்கு வியர்க்காத அளவுக்கு நல்ல காரை நானே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த மேற்கு மண்டலத்துக்கு இழைத்த பச்சைத் துரோகப் பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் துரோகம். சென்னையைப் போல, கோவை, மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் தேவை என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், மத்திய பாஜக அரசு அதை நிராகரித்திருக்கிறது. பாஜகவுக்கு வாக்களிக்காத தமிழகம் எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் பாதுகாப்புப் பிரச்சினைகள், தீவிரவாதப் போக்கு நிலவுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார்.
மத்திய பாஜக ஆட்சியில் தான், பஹல்காம் தாக்குதல், டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்து மக்கள் பலர் பலியாயினர். மணிப்பூர் இன்றைக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பாஜக ஆட்சியை புகழ்ந்து பேசியுள்ள ஆளுநர், அமைதிப் பூங்காவான தமிழகத்தை தீவிரவாத மாநிலம் என்று பேசியிருக்கிறார்.
தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு கண்டனத்திற்குரியது. கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க நிறைவேற்றிய மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அளவுக்கு அதில் என்ன அரசியலமைப்புச் சட்ட பிரச்சினை இருக்கிறது. இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுக்கவில்லை என்றால், தமிழக எம்பி-க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை வைப்பார்கள்.
மக்கள் மீதான எங்களின் உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் எங்களுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகிறது. ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகிறோம். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் அடுத்த மாதத்தில் இருந்து வழங்க இருக்கிறோம். அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் மக்களின் வாக்குரிமையையே பறிக்கலாமா என்று பார்க்கிறார்கள்.நீங்கள் எல்லோரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனென்றால், திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று. அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.
முன்னதாக, ஈரோடு மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், ரூ.4.90 கோடியில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடியஅரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘2019-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழாவில் பேசியபோது, மாவீரன் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்போம் என்று உறுதியளித்தேன். அதை இன்று நிறைவேற்றி இருக்கிறேன்.
கடந்த ஜூன் மாதம் `தி இந்து' ஆங்கில நாளேட்டில், அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம், அந்த மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காக நிகழ்கிறது என்பதைப் பற்றி ஆதாரத்துடன் செய்தி வெளியானது. அந்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வாய்ப்பு கிடைத்ததற்கு இன்று பெருமைப்படுகிறேன்’ என்றார்.