திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்புயல் - எவரெஸ்டில் சிக்கியுள்ள 1000 பேரின் நிலை என்ன?

திபெத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக, எவரெஸ்ட் மலையின் கிழக்குப் பகுதிகளில் உள்ள முகாம்களில் 1000க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
மலை ஏறுவதற்கும், சுற்றுலாச் செல்வதற்கும் மிகவும் பிரசித்தமானது எவரெஸ்ட் சிகரத்தை சுற்றியுள்ள பகுதிகள். இந்த நிலையில், திபெத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 3) அன்று தொடங்கிய கடும் பனிப்பொழிவு மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பகுதியானது நிலப்பரப்பில் இருந்து 4,900 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவு காரணமாக சிகரத்தின் மேற்பகுதிக்கு செல்லும் பாதையானது மூடப்பட்டுள்ளது. எனவே மேற்பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்புக்குழுக்களும், உள்ளூர் மக்களும் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் 200 பேரை தொடர்புகொண்டிருப்பதாகவும், அவர்களையும் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவரெஸ்ட் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பனிப்பொழிவு காரணமாக அண்டை நாடான நேபாளமும் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 52 பேர் உயிரிழந்திருப்பதாக நேபாள அரசு தெரிவித்திருக்கிறது.
சீனாவில் மவுண்ட் கோமோலாங்மா என்று அழைக்கப்படுகிற எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 8,849 மீட்டருக்கும் அதிகம். சீனாவில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் முகாம்களுக்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் சரிந்ததாகவும், இதனால் மலையேற்ற வீரர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிப்பொழிவால் எவரெஸ்ட் பகுதிக்கு செல்வதற்கான சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுச்சீட்டு விநியோகம் சனிக்கிழமையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அக்டோபர் மாதத்தில் எவரெஸ்ட் பகுதியைச் சுற்றி வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் மலையேறுபவர்கள் பெரும்பாலும் இந்த காலத்தில்தான் அதிகம் வருகை புரிவர். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் திடீர் பனிப்பொழிவு நிலைமையை மோசமாக்கி இருக்கிறது.
இதனிடையே, பசிபிக்கில் ஏற்பட்ட, டைபூன் மாட்மோ என பெயரிடப்பட்ட புயலானது தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் நகரின் கிழக்கு கடற்ரையில் நேற்று (அக்.5) கரையை கடந்தது. இதனால் அங்கு மணிக்கு 151 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி வருவதால் சுமார் 3.47 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.