புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்? மூத்த நீதிபதி பெயரை பரிந்துரைத்த கவாய்!

புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்? மூத்த நீதிபதி பெயரை பரிந்துரைத்த கவாய்!

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி கவாய் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் அடுத்த மாதம் 24 ஆம் தேதி (நவம்பர் 24) ஓய்வுபெற உள்ளார். ஓய்வுபெறும் தலைமை நீதிபதியிடம், மத்திய சட்ட அமைச்சகம் புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக பெயர்களை பரிந்துரைக்க கோரி கடிதம் எழுதியிருந்தது.

இந்த கடிதத்தை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதி தொடர்பாக தனது பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதையை தலைமை நீதிபதியான கவாய் அளித்துள்ளார். அந்த வகையில், மூத்த நீதிபதி சூர்ய காந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தனது பரிந்துரை கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கவாய் அனுப்பியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீதிபதி சூர்ய காந்த், 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்தவர். 1984இல் ரோத்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடிந்த அவர், ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றினார். தொடர்ந்து 1985இல் சண்டிகரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

அரசியலமைப்பு, சிவில் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சூர்ய காந்த், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கன், வங்கிகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு ஹரியானா மாநில அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் சிறப்பான செயல்பாடு காரணமாக 2004ஆம் ஆண்டு சண்டிகர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 14 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அனுபவம் இவருக்குள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும், 2018இல் இமாச்சல பிரதேசத்தின் தலைமை நீதிபதியானார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிரடி காட்டும் சூர்ய காந்த், 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில், 2027 பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று ஓய்வு பெறுவார். கிட்டதட்ட 15 மாதங்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை அவர் வகிப்பார். கவாய் ஓய்வை அடுத்து, நவம்பர் 24 ஆம் தேதி நாட்டின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.