இலங்கை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டவர் ஆர்.ஸ்ரீதர். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக 15 முதல் தர போட்டிகளில் விளையாடி 574 ரன்களையும், 91 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேசமயம் லிஸ்ட் ஏ போட்டிகளில் 15 ஆட்டங்களில் விளையாடி 69 ரன்கள் மற்றும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஃபீல்டிங்கிற்கு பெயர் போன ஸ்ரீதர், கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அண்டர்19 அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஆந்திரா மற்றும் திரிபுரா ரஞ்சி அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பின் 2014ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் செயல்பட்டார்.
கிட்டத்திட்ட 7 ஆண்டுகள் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பிடித்திருந்த ஸ்ரீதர், 2021ஆம் ஆண்டு அக்குழுவில் இருந்து வெளியேறினார். அதன்பின் கடந்த 2024ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானின் துணை பயிற்சியாளராகவும் செயல்பட்டார். மேலும் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் தான், எதிவரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதரை நியமித்துள்ளது.