இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி; பெங்களூரு புல்ஸ் அதிர்ச்சி தோல்வி!
பாட்னா பைரேட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் 2 ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 37-46 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று டெல்லியில் உள்ள தியாகராஜ் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் 2 ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய பாட்னா அணி அடுத்தடுத்து புள்ளிகளைக் கைப்பற்றி அசத்தியது. மறுபக்கம் பெங்களூரு அணி புள்ளிகளைக் கைப்பற்ற தடுமாறியது.
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் பாட்னா பைரேட்ஸ் அணி 16 ரைட் புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் மற்றும் ஒரு கூடுதல் புள்ளி என 27 புள்ளிகளை வென்றது. பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் 7 ரைட் புள்ளிகள், 4 டேக்கிள் புள்ளிகள் மற்றும் 2 கூடுதல் புள்ளிகளை மட்டுமே எடுத்து 13 புள்ளிகளை கைப்பற்றியது. இதன் மூலம் பாட்னா அணி முதல் பாதி முடிவின் போதே 14 புள்ளிகள் முன்னிலைப் பெற்று வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்திருந்தது.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-37 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை அணியை வீழ்த்தியதுடன், எலிமினேட்டர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மறுபக்கம் தோல்வியைச் சந்தித்துள்ள பெங்களூரு புல்ஸ் அணியானது நடப்பு சீசனில் எலிமினேட்டர் சுற்றுடன் தங்கள் பயணத்தை முடித்து, தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி
நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக முதல் பாதி முடிவில் புனேரி பால்டன் அணி 17 புள்ளிகளையும், தபாங் டெல்லி அணி 18 புள்ளிகளையும் கைப்பற்றி இருந்தன. பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அனல் பறந்தது.
இரு அணியும் மாறி மாறி புள்ளிகளை எடுக்க, எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் புனேரி பால்டன் அணி 17 புள்ளிகளையும், தபாங் டெல்லி அணி 16 புள்ளிகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணியும் தலா 34 புள்ளிகளை கைப்பற்றியதன் காரணமாக, போட்டியின் முடிவானது சூப்பர் ரைடிற்கு சென்றது.
சூப்பர் ரைடில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தபாங் டெல்லி அணி 5 ரைட்களில் 6 புள்ளிகளை கைப்பற்றிய நிலையில், புனேரி பால்டன் அணி 4 புள்ளிகளை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தபாங் டெல்லி அணி சூப்பர் ரைடில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், நடப்பு புரோ கபடி லீக் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.