வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த ஐசிசி - காரணம் என்ன?
bcb-must-confirm-india-participation-by-this-wednesday-icc-gives
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து ஜனவரி 21 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கெடு விதித்துள்ளது
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் இறங்கியுள்ளன. மேலும் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது, சர்வதேச கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் வங்கதேசம் பங்கேற்குமா? இல்லையா? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த பேச்சுவார்த்தையின் போது, வங்கதேச கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வங்கதேசம் ஆர்வமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
ஆனால் வங்கதேச அணிகளின் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதனை மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி இந்தியா சென்று விளையாட மறுக்கும் நிலையில், அந்த அணிக்கு பதில் வேறு அணியை உலகக் கோப்பை தொடரில் விளையாட வைக்கவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், வங்கதேச அணி தொடரை புறக்கணிக்கும் பட்சத்தில், அந்த அணிக்கு பதிலாக தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் என்ன முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அந்நாட்டு கிரிக்கெட் வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் பிசிசிஐ உத்தரவின் பேரில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த வங்கதேச அரசாங்கம், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பை ரத்து செய்வதாக அறிவித்தது. மேற்கொண்டு வீரர்களின் பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி குரூப் சி பிரிவில், வெஸ்ட் இண்டீஸ் இத்தாலி, இங்கிலாந்து மற்றும் நேபாள் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. மேலும் உலகக் கோப்பை அட்டவணைப் படி பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் அந்த அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.