போதையில் புரோட்டா மாஸ்டரை அடித்துக் கொலை... சேலத்தில் கொடூரம்

போதையில் புரோட்டா மாஸ்டரை அடித்துக் கொலை... சேலத்தில் கொடூரம்

உணவகத்தில் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் புரோட்டா மாஸ்டரை கொடூரமாக அடித்து கொலை செய்த சப்ளையரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). இவர் ஏற்காடு சாலையில் கோரிமேடு பகுதியில் உள்ள முரளி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக நேற்று வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த உணவகத்தில் சப்ளையராக சேலம் மாவட்டம் நாலுகால் பாலம் பகுதியை சேர்ந்த முருகன் (56) என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.

முதல் நாள் பணி முடிந்த நிலையில் இரவு 11 மணி அளவில் புரோட்டா மாஸ்டர் சரவணனும், சப்ளையர் முருகனும் உணவகத்திலேயே தங்கி ஒன்றாக மது அருந்தி உள்ளனர். மேலும், முருகன் கஞ்சா போதையில் இருந்ததாகவும் தெரிகிறது.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் சப்ளையர் முருகன், புரோட்டா மாஸ்டர் சரவணணை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த சரவணனை உணவகத்தின் பின் புறம் இழுத்துச் சென்று விறகு கட்டையால் முகத்தில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் எதுவும் தெரியாதது போல் உணவகத்திலேயே இரவு உறங்கி விட்டார்.

அதனைத் தொடர்ந்து, காலை வழக்கம் போல் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று குளித்து விட்டு வேலைக்கும் வந்துள்ளார். இதற்கிடையே உணவகத்தின் பின்புறம் சடலம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இரவு உணவகத்தில் தூங்கிய சப்ளையர் முருகனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த காவல் துறையினர் உணவகத்திற்குள் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அதில் புரோட்டா மாஸ்டர் சரவணனை சப்ளையர் முருகன் தாக்கியது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து முருகனை கன்னங்குறிச்சி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.