அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா சிறப்பான ஆட்டம்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா சிறப்பான ஆட்டம்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியை பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருந்த ஸ்டீவ் ஸ்மித், உடல் நலக்குறைவால் போட்டியிலிருந்து விலகினார். இதன் காரணமாக உஸ்மான் கவாஜாவுக்கு லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஜேக் வெதர்லேட் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 18 ரன்களுடன் ஜேக் வெதர்லேட்டும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 19 ரன்னிலும், கேமரூன் க்ரீன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி 94 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த உஸ்மான் கவாஜா - அலெக்ஸ் கேரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிலிருந்து மீட்டனர். இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 10 பவுண்டரிகளுடன் 82 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 32 ரன்களிலும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 13 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலெக்ஸ் கேரி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். பின்னர் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 106 ரன்களை சேர்த்த கையோடு அலெக்ஸ் கேரியும் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்களை சேர்த்தது.

இதில் மிட்செல் ஸ்டார்க் 33 ரன்களுடனும், நாதன் லையன் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கைவசம் 2 விக்கெட்டுகள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.