இந்துக்களின் மயானத்தை சீரமைக்க முயற்சி எடுத்த இஸ்லாமியர்கள் - ரவணசமுத்திரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

இந்துக்களின் மயானத்தை சீரமைக்க முயற்சி எடுத்த இஸ்லாமியர்கள் - ரவணசமுத்திரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் பேசுபொருளான நிலையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது ரவணசமுத்திரம் என்ற குக்கிராமம்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள இந்த கிராமம் பாண்டிய மன்னர்கள் காலத்தில் ரவணப்ப நாயக்கர் என்பவரின் ஆளுகைக்கு கீழ் இருந்தது. அவரது நினைவாக ‘ரவணசமுத்திரம்’ என அழைக்கப்படுகிறது. இங்கு 1,270 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 70 சதவீதம் இஸ்லாமியர்கள். 30 சதவீதம் இந்து சமுதாயத்தினர்.

இங்கு இஸ்லாமியர்களும், இந்துக்களும் உறவினர்களைப் போல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கோயில்களில் முதல் மரியாதை இஸ்லாமியர்களுக்கு தான். திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். அதே போல், பள்ளிவாசலில் நடைபெறும் கந்தூரி விழாவில் இந்து சமுதாய மக்கள் தான் சிறப்பு அழைப்பாளர்கள்.

அது மட்டுமல்லாது வீட்டு விசேஷங்களிலும் அன்யோன்யமாக பழகி வருகின்றனர். நல்லது - கெட்டது என அனைத்து நிகழ்வுகளிலும் மதம் பார்க்காமல் கலந்து கொள்கின்றனர். இப்படி சொந்தம் - பந்தம் போன்று இந்துக்களும், முஸ்லிம்களும் வாழ்ந்து வரும் இந்த கிராமத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, இங்கு வசிக்கும் இந்து சமுதாய மக்களின் மயானத்தை சீரமைக்கவும், எரிமேடைகளை புதுப்பித்து தரவும் இஸ்லாமியர்கள் முயற்சி எடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழுதடைந்த மயானம்

ரவணசமுத்திரம் கிராமத்தில் இந்து மக்களுக்காக ஊராட்சி சார்பில் பல வருடங்களுக்கு முன்பாக சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மயானம் அமைத்து கொடுக்கப்பட்டது. இதில், இந்து சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியாக நான்கு எரிமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எரிமேடைகள் கட்டி பல்வேறு வருடங்கள் ஆனதால் தற்போது பழுதடைந்து, எரிமேடையின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், மயானத்தை சுற்றி வேலி இல்லாததால் இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர்.

வருவாய்த் துறை ஆய்வு

இது குறித்து இந்து மக்கள், இஸ்லாமிய நண்பர்களிடம் வேதனையை பகிர்ந்துள்ளனர். இதனைக் கேட்ட ஊராட்சி முன்னாள் தலைவரான புஹாரி மீரா சாஹிப், தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவி மையத்தின் செயலாளர் முகமது சலீமை தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸை நேரில் சந்தித்து, இது தொடர்பாக மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

அதன்படி, சில தினங்களுக்கு முன் பழுதடைந்த மயானத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்து மக்களின் பிரச்சினைக்காக இஸ்லாமியர்கள் குரல் கொடுத்திருப்பதோடு, மக்கள் பிரதிநிதியை நேரில் சந்தித்து மனு அளித்திருப்பது மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய முகமது சலீம், “ரவணசமுத்திரம் மத ஒற்றுமைக்கு பெயர் பெற்ற ஊர். மக்கள் வாழ்ந்து முடிந்த பின், கடைசி காலத்தில் நிம்மதியாக போக வேண்டும் என்று எங்கள் மதம் கூறுகிறது. ஆனால், இந்துக்களின் மயானம் மோசமாக இருந்ததால் நாங்கள் எம்பி ராபர்ட் புரூஸை சந்தித்து மனு அளித்தோம். அவரும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்” என்றார்.

இது குறித்து ரவணமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் கூறுகையில், “மயானத்திற்கு இறந்தவர்களை கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். பாதை சரியாக இல்லை. ஆற்றில் இறங்கி தர்ப்பணம் செய்வதற்கும் வசதிகள் இல்லை. எனவே, மயானத்தை சீரமைத்து தர எம்பி-யிடம் இஸ்லாமியர்கள் மனு அளித்துள்ளனர்” என்றார்.

தொடர்ந்து, ரவணமுத்திரம் ஊராட்சி முன்னாள் தலைவர் புஹாரி மீரா சாஹிப் கூறுகையில், “எங்கள் வீடுகளில் கல்யாணம் என்றால் இந்து மக்களுக்கு முதல் அழைப்பு விடுப்போம். நாங்கள் மாமன், மச்சானாக, சகோதரனாக வாழ்ந்து வருகிறோம். இங்கு இந்துக்களின் மயான பிரச்சனை குறித்து எம்பியிடம் மனு அளித்ததில், 2 எரிமேடைகள், நன்மைக்கூடம், வேலி மற்றும் ஆற்றில் தர்ப்பணம் செய்வதற்கு தேவையான படிகட்டுகள் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்“ என்றார்.

மேலும், ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த பிரபல சினிமா இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறுகையில், “இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்று கூடி விடுவார்கள். ஆனால், இங்குள்ள மாயனம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனை நினைத்து வேதனை அடைந்தோம். இந்து மக்களின் மயணமாக இருந்தாலும், இஸ்லாமிய நண்பர்கள் இணைந்து மயானத்தை சீரமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறார்கள். எங்கள் மயானத்தை சீரமைக்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் பரத்வாஜ், ‘காதல் மன்னன்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக ஜெமினி படத்தில் வரும் "ஓ" போடு. ஐயா படத்தில் "ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" போன்ற ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் தனது சொந்த கிராமமான ரவணசமுத்திரத்தில் வசித்து வருகிறார்.