’ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, விநாயகன், சந்தானம் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்து வரும் திரைப்படம் ’ஜெயிலர் 2’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டதை நெருங்கி உள்ள நிலையில், திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று தனது 75-வது பிறந்தநாளை ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் முதல் பாகம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இதன் காரணமாக ’ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா துறையில் 50 வருடங்களாக வசூல் மன்னனாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் திரைத்துறையில் இந்த ஆண்டு 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார். ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இன்று ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் கடந்த 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இப்படம் குறித்த நினைவுகளை ரஜினிகாந்த் வீடியோ மூலம் அண்மையில் பகிர்ந்து கொண்டார். இந்த மேக்கிங் வீடியோவை அவரது மகளும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.