விஜய் ரசிகர்களை வெறி ஏற்றும் ’ராவணன் மவண்டா’ பாடல் - ஜனநாயகன் திரைப்படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு

விஜய் ரசிகர்களை வெறி ஏற்றும் ’ராவணன் மவண்டா’ பாடல் - ஜனநாயகன் திரைப்படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு

ஜனநாயகன் திரைப்படத்தின் ’ராவணன் மவண்டா’ பாடல் இதுவரை யூடியூபில் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் ’ராவணன் மவண்டா’ பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் இசையில் இந்தப் பாடல் மீண்டும் ஒரு மாஸ் பாடலாக அமைந்துள்ளது. பாடல் முழுக்கவே படத்தில் விஜய்யின் மாஸான பிஜிஎம் இடம் பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் அவரது கடைசி படம் என்று கூறப்படும் ஜனநாயகன் திரைப்படத்தை ஆ.வினோத் இயக்கியுள்ளார். மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளம் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது, கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் விஜய், தனக்காக திரையரங்கம் போய் நின்ற ரசிகர்களுக்காக எனக்குப் பிடித்த சினிமாவையே விட்டு செல்கிறேன் என்றார். மேலும் குறிப்பாக கடத்த 33 ஆண்டுகளாக தனக்காக திரையரங்கம் போன ரசிகர்களுக்காக அடுத்து வருகிற 33 ஆண்டுகளுக்கும் மக்களின் பிரச்சனைக்காக போய் நிற்பேன் என உணர்ச்சி மிகுந்து பேசினார்.

ஜனநாயகன் திரைப்படத்தில் இருந்து இதற்கு முன்பு ’தளபதி கச்சேரி’, ’ஒரு பேரே வரலாறு’ ’செல்ல மகளே’ போன்ற பாடல்கள் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ’ராவணன் மகன்டா’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

அதிலும் குறிப்பாக ”ராவணன் மவண்டா, ஒத்தையில் நிக்கிற எமன்டா, அத்தனை பிம்பமும் அவன்டா, உலக ஆண்டவன்டா, வா வந்து தொடுடா, குத்துற கொம்பனும் எவன்டா?” என்கிற வரிகள் அவரது அரசியல் பயணத்திற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக விஜய் செல்லும் போது மறக்காமல் இந்த பாடல் இடம்பெற வாய்ப்பு உள்ளது.