' ’படையப்பா’ படத்தை பாராட்டிய கலைஞர் கருணாநிதி' - ரஜினிகாந்திற்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

' ’படையப்பா’ படத்தை பாராட்டிய கலைஞர் கருணாநிதி' - ரஜினிகாந்திற்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75 பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”75 வருடங்கள் குறிப்பிடத்தக்க வாழ்வில், 50 வருடங்கள் புகழின் உச்சியில் சினிமா வாழ்க்கை. என் நண்பர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் கவிஞர் வைரமுத்து படையப்பா பார்த்துவிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்த கருத்து குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புக் குறையாமல் வெளியாகிறது படையப்பா. மூங்கில் குழாயில் அடைத்து மூடிப் புதைக்கப்பட்ட தேன் கால்நூற்றாண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்படுகையில் வீரிய பானமாய் வெளிப்படுவது மாதிரி, காலம் கடந்தும் கலக்கவருகிறது ’படையப்பா’.

மறக்க முடியாத ஒரு நிகழ்வு சொல்கிறேன். படத்தின் முதல் பிரதி முதலமைச்சருக்குப் போட்டுக் காட்டப்படுகிறது, விஜயராகவா சாலையில் தேவி ஸ்ரீதேவி குறுந்திரையரங்கில் திரையீடு நிகழ்கிறது.

அந்நாள் முதலமைச்சர் கலைஞர், மேலும் சில அமைச்சர்கள், ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் நான் மற்றும் சிலர் படம் பார்க்கிறோம். படம் நிறைந்தது கலைஞர் வெளியே வருகிறார், யாரும் இல்லை நிருபர் கங்காதரன் மட்டும் எப்படியோ துப்பறிந்து வந்துவிடுகிறார் “ஐயா! படம் எப்படி இருக்கிறது” என்று ஒரு வினாவை வீசுகிறார்.

சற்றும் இடைவெளி இல்லாமல் “படையப்பா, பழைய சாதனைகளை உடையப்பா என்றிருக்கிறது” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறுகிறார் கலைஞர். அவர் வாக்குப் பொய்க்குமா? பலித்தது தன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ரஜினி வழங்கும் பாசப் பரிசு படையப்பா தங்கம் பழையதாகலாம், விலை குறையுமா?” என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 1999இல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ’படையப்பா’ திரைப்படம் இன்று பல்வேறு திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.