திரையுலகில் அரை நூற்றாண்டு பயணம்: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது

திரையுலகில் அரை நூற்றாண்டு பயணம்: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது

ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை கௌரவிக்கும் வகையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதை ரஜினிகாந்தின் சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கில் INDO CINE APPRECIATION FOUNDATION சார்பில் தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், திரைப்பட நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். இந்த விழாவில் கௌரவ விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

ரஜினியின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை கௌரவிக்கும் விதத்தில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட விருதை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அவர் பேசும்போது, "உலகம் முழுவதும் ஒவ்வொரு தனி நபரும் எனது தந்தை ரஜினிகாந்தின் பிறந்தநாளை தங்களின் வழியில் கொண்டாடி வருகின்றனர். அனைவருடனும் இணைந்து ரஜினிகாந்தும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்" என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ”திரைப்படத்துறையினருக்கு சொந்த வீடு என்பது ஒரு நீண்டகால கனவாக இருந்தது. அந்தக் கனவு நினைவாக்கும் வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை கலைஞர் ஒதுக்கீடு செய்தார். திரைப்படத்துறைக்கும் திராவிட இயக்கத்திற்கும் உள்ள உறவு வரலாற்றில் பொறிக்கப்பட்டவை.

பூந்தமல்லி அருகே சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கோடி ரூபாய் மதிப்பில் வி.எஃப்.எக்ஸ் அனிமேஷன் வசதியுடன்கூடிய திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகளை பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ 2009ஆம் ஆண்டில் இருந்து 2015 வரை மீதம் இருந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2022 வரையான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன" என்றார்.

மேலும் அதிக அளவில் இளைஞர்கள் இந்த விழாவிற்கு வந்து திரைப்படங்களை காண வேண்டும். நாம் முதலில் திரைப்படங்களை ஒரு வியாபாரமாக மட்டும் பார்க்காமல் கலையாக பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை நான் சினிமாவை நேசிக்கிறேன், இதுபோன்ற முன்னெடுப்பு நிகழ்ச்சிகளை நான் எப்போதும் ஆதரிப்பேன்” என்றார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள் குறித்து கேட்டபோது, ”நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகை. அவருக்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படமும் திரையிடப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நடித்த படங்களில் மிகவும் சிறப்பான படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தை கருதுகிறேன்” என்றார்.

நேற்று (டிச.11) தொடங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 18ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் திரைப்பட விருதுகள் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.

இவ்விழாவில் 122 திரைப்படங்களில் டூரிஸ்ட் பேமிலி, பறந்து போ, மாயக்கூத்து உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பட வாழ்வினை கௌரவிக்கும் வகையில் ’பாட்ஷா’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

மேலும் எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியை சார்ந்த மாணவர்களின் ஆறு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.