ஹைதராபாத் ஐடி பெண் ஊழியர் அமெரிக்காவில் படுகொலை

ஹைதராபாத் ஐடி பெண் ஊழியர் அமெரிக்காவில் படுகொலை

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும் 27 வயது ஐ.டி. ஊழியரான நிகிதா காடிசலாவின் உடலை ஹைதராபாத்துக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அப்பெண்ணின் தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்டு யாரேனும் தமது மகளை கொலை செய்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் சர்மா என்ற நபர் பலரை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நபரே தமது மகளையும் ஏமாற்றி இருக்கலாம் என்று ஹைதராபாதில் உள்ள தமது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிகிதாவின் தந்தை ஆனந்த் கூறினார். "அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மகள் கொல்லப்பட்டிருக்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அர்ஜுன் சர்மா தமது மகளின் முன்னாள் ஆண் நண்பர் என்று சில ஊடகங்களில் வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்த ஆனந்த், "நிகிதா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் முன்பு அவருடன் வசித்து வந்த நான்கு நபர்களில் ஒருவர்தான் அர்ஜுன் சர்மா" என்றும் அவர் தெரிவித்தார்.

கடைசியாக, புத்தாண்டு அன்று மாலை தனது மகளிடம் தொலைபேசியில் பேசியதாக கண்ணீர் மல்க கூறிய ஆனந்த், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசும், தெலங்கானா மாநிவ அரசும் ஆவன செய்ய வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தின் மூத்த மகளான நிகிதா காடிசலா, கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன நிகிதா; இந்தியாவுக்கு பறந்த சர்மா

முன்னதாக, கொலம்பியா மாகாணத்தின் மேரிலேணட் பகுதிக்குட்பட்ட எல்லிகாட் நகரில் இருந்து நிகிதா காணாமல் போனதாக ஜனவரி 2-ம் தேதி தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், கடைசியாக அவர் டிசம்பர் 31-ம் தேதி, மேரிலேண்ட் பகுதியில் உள்ள சர்மாவின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துள்ளார் எனவும் ஹோவார்டு நகர போலீசார் தெரிவித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் நிகிதாவை தேடும் பணியில் காவல் துறை இறங்கியது. அப்போது சர்மாவின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரத்த காயங்களுடன் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர். இதையடுத்து நிகிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறை விசாரணையை தொடங்கியது.

அதே சமயம், டிசம்பர் 31-ம் தேதி நிகிதா காணாமவ் போனதாக சர்மாவும் ஜனவரி 2 -ம் தேதி போலீசில் புகார் அளித்திருந்ததும், அதன்பின் அதே நாளில் அவர் விமானத்தில் இந்தியாவுக்கு பறந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, அர்ஜுன் சர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்த அமெரிக்க காவல் துறை, சர்மாவுக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பித்தது.

டிசம்பர் 31-ம் தேதி மாலை 7 மணியளவில் நிகிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறும் போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறினர்.

இதனிடையே, அமெரி்க்காவில் இருந்து தமிழ்நாடு வந்த அர்ஜுன் சர்மாவை, இன்டர்போல் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரை அமெரிக்கா அழைத்துச் சென்று அங்கு விசாரணை மேற்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.