தமிழகத்திற்கு மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்கள்.. எந்த ரூட்டில் வரப்போகுது தெரியுமா?
தமிழகம் - மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்பட இருக்கும் இந்த ரயில்கள் செல்லும் ரூட் மற்றும் பயண இலக்கு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம். இந்த ரயில்கள் வரும் 17 அல்லது 18ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அம்ரித் பாரத் ரயில்கள் இந்தியாவில் அதிநவீன ரயில்களை இயக்குவதில் ரயில்வே ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள் என பிரீமியம் ரயில்களாக இது இயக்கப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால், வந்தே பாரத்துக்கு இணையான வசதிகளுடன் குறைந்த கட்டண ரயிலாக அம்ரித் பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் ஏசி இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி, தாம்பரம், நாகர்கோவில் ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சூழலில்தான், தமிழக - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையே இந்த அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 3 வழித்தடங்கள் * ஜல்பாய்குரி - திருச்சி இடையேயான அம்ரித் பாரத் ரயில், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எக்மோர் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. * கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - மேற்கு வங்கம் ஜல்பாய்குரி இடையேயான அம்ரித் பாரத் ரயில், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, கோவை, திருப்பூர், ஈரோடு, காட்பாடி வழியாக ஆந்திராவின் ரேனிகுண்டா, குண்டூர் வழியாக இயக்கப்படும்.
தாம்பரம் - சந்திரகாச்சி இடையேயான அம்ரித் பாரத் ரயில் எழும்பூர், சூலூர் பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களின் சேவை அடுத்த வாரம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அம்ரித் பாரத் ரயிலில் உள்ள வசதிகள் * அம்ரித் பாரத் ரயில்கள் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம். CCTV கேமரா, தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனி USB, Type C சார்ஜிங் வசதி, மொபைல் ஹோல்டர்கள், வாட்டர் பாட்டில் ஹோல்டர்கள், LED விளக்குகள், * டிஜிட்டல் தகவல் போர்டுகள், தீ தடுப்பு கருவிகள், அவசர காலத்தில் டாக்-பேக் வசதி, நவீன் பிரேக்கிங் சிஸ்டம், மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தக்கூடிய அளவிலான டாய்லெட்டுகள் உள்ளிட்டவை இந்த அம்ரித் பாரத் ரயிலில் உள்ளன.