மழைநீரில் தத்தளிக்கும் வேலூர் புதிய பேருந்து நிலையம்; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

: புதிய பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்காத வகையில் விரைவில் தீர்வு காணப்படும் என வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்ட முக்கியமான வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாகும். இந்த பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவையும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய மழையிலேயே, பேருந்து நிலையம் அருகே உள்ள முக்கிய சாலையில் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்பது தங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மழைநீர் வடிந்து செல்ல வேண்டிய கால்வாய்கள் முறையாக திட்டமிடப்படாததால், இந்த இடத்தில் சிறிய மழை பெய்தாலே பெரும் சிக்கலாக மாறுவதாகவும், சாலையின் மேற்பரப்பில் நீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்கள், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடையும் நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
குறிப்பாக புதிய பேருந்து நிலையம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. மழை காலங்களில், இதுபோன்று தண்ணீர் தேங்கி நிற்பது, போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலை விபத்தக அபாயமாகவும் உள்ளது.
புதிய பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்கியுள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்கும் நிலைமை குறித்து எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டவை. இருப்பினும், மழைநீர் தேங்கும் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் கூடுதல் வடிகால் வசதிகளை உருவாக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சமீபத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து, அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய நமது பொறியியல் குழு அந்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் சாலை உயரம் குறைவாக இருப்பது உள்ளிட்டவை நீர் தேங்க காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்க, கால்வாய்களை தூர்வாரும் பணிகளும், உலோக வழி குழாய்கள் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்," என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் சிரமங்களை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இந்த இடத்தை தாழ்வான பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை உருவாகாத வகையில் முழுமையான திட்டத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.