முதலமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகள்: வெற்றியாளர்களை கௌரவித்த துணை முதல்வர்!

முதலமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகள்: வெற்றியாளர்களை கௌரவித்த துணை முதல்வர்!

 முதலமைச்சர் கோப்பை இ - ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களையும் வழங்கினார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை இ - ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை அணிவித்து, மொத்தம் ரூ.9.75 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலை, சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாட்டின் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படும் முதலமைச்சர் கோப்பை 2025 -ஆம் ஆண்டிற்கான போட்டியையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகளை தமிழக முதலமைச்சர் மு.க கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

முதலைமைச்சர் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகைக்காக 37 கோடி ரூபாய் உள்பட மொத்தம் 83.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்போது முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசுப் பணியாளர்கள் என 5 பிரிவுகளில் 16,28,338 பேர் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து, 37 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 30,136 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கடந்த அக்டோபர் 2 -ம் தேதி முதல் நாளை (அக்.14) வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 நகரங்களில் நடைபெற்று வரும் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இதனிடையே, 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுப் பிரிவில் ஆன்லைன் தகுதித் சுற்றுக்காக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெற்ற 6 விளையாட்டு பிரிவுகளின் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகளில் 3 விளையாட்டு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார். அத்துடன் மொத்தம் ரூ.9.75 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலைகள், சான்றிதழ், நினைவுச் சின்னம் ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2024 விளையாட்டு போட்டிகளில் இ-ஸ்போர்ட்ஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (Olympic Council of Asia), வரவிருக்கும் 2026-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மொத்தம் 11 இ-ஸ்போர்ட்ஸ் பிரிவுகள் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளது. மேலும், சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee - IOC) முதலாவது ஒலிம்பிக் இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை 2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடத்த தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 14.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி கூடைப்பந்து பயிற்சி இயந்திரம் மற்றும் 14.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தானியங்கி வாலிபால் பயிற்சி இயந்திரங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.