வங்கதேச மாணவர் இயக்க தலைவர் உடல் நல்லடக்கம்: லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

வங்கதேச மாணவர் இயக்க தலைவர் உடல் நல்லடக்கம்: லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

வங்கதேசத்தில் கொல்லப்பட்ட மாணவர் இயக்கத் தலைவர் ஹாடியின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் மாணவர் போராட்டத்தை தொடர்ந்து அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், வங்கதேசத்தை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த போராட்டத்தை மாணவர்கள் இயக்கத்தின் தலைவர் ஷெரீப் உஸ்மான ஹாடி என்பவர் முன்னெடுத்து நடத்தினார்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் தனது தேர்தல் பரபரப்புரையை ஹாடி தொடங்கினார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் ஹாடியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடிக்கு முதலில் வங்கதேசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆறு நாள்கள் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த வியாழன் அன்று மரணமடைந்தார்.

இதனையடுத்து வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் மாணவ இயக்கத்தினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டனர். நாட்டின் பெரிய நாளிதழ்களான புரோதம் அலோ மற்றும் டெய்லி ஸ்டார் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். இந்நிலையில், உயிரிழந்த ஹாடியின் உடல் சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு வங்கதேசத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்துல அவரது உடல் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வங்கதேசத்தின் தேசிய கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பேசிய வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், "ஹாடியின் கொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். ஹாடி மறைந்தாலும் அவர் வங்கதேச மக்களின் ஒவ்வொரு இதயங்களிலும் வாழ்ந்து வருகிறார்" என்றார்

உயிரிழந்த 32 வயதான ஹாடி இந்தியாவின் மீது வெளிப்படையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். குறிப்பாக ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சம் கொடுத்ததை ஹாடி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், ஹாடியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சைக்கோட் என்பவர் கூறும் போது, இந்தியா மீதான தனது கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே ஹாடி கொலை செய்யப்பட்டுள்ளதாக தான் நம்புவதாக தெரிவித்தார். வங்கதேச மண்ணையும், அதன் இறையான்மையும் நேசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஹாடியின் வழியை பின்பற்றி வருங்காலங்களில் பயணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஹாடியை கொன்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்நாட்டு காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கொலையாளிகள் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக ஹாடியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஹாடியின் மரணத்தால் கடந்த சில நாட்களாக வன்முறைக் காடான வங்கதேசத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு தீவிரம் காட்ட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.