ஷுப்மன் கில்லை நீக்கியது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்

ஷுப்மன் கில்லை நீக்கியது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்

டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி மிக வலிமையானது என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. மும்பையிலுள்ள பிசிசிஐ அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்தீப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து அணியை அறிவித்தனர்.

அந்தவகையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். முன்னதாக, சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவதன் காரணமாக, அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் பிசிசிஐ, சூர்யகுமார் யாதவ் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அணியின் கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது.

அதேபோல் அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்ஸர் படேலுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, அணியின் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்த இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாள்களாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த ரிங்கு சிங்கும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.

மேற்கொண்டு தமிழக வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன், நட்சத்திர வீரர்கள் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அணியில் கடந்த இரண்டு தொடர்களில் இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷுப்மன் கில், விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அணி தேர்வு குறித்து பேசிய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், "நாங்கள் அணியின் தொடக்க வீரராக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஷுப்மன் கில் சமீப காலமாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், அவர் எவ்வளவு திறமையான வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எல்லாவற்றையும் விட அணிக்கு என்ன தேவை என்பதே முக்கியம். சில வீரர்களால் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விளையாட முடியாத நிலை ஏற்படும், ஏனெனில் அவர்கள் மற்றொரு வடிவத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

இதைப்பற்றி பெரிதாகப் பேச வேண்டாம். கடந்த சில ஆண்டுகளாக, கில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். அவர் என்ன செய்ய வேண்டும், அவருக்கு என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும், மேலும் உலகக் கோப்பை வரும்போது, ​​அவர் மீண்டும் நம்பர் 1 இடத்திற்குத் திரும்புவார் என்று நம்புகிறோம். மேலும் இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக நல்ல ஃபார்மில் இருக்கிறார். தொடக்க வீரராக ஒரு விக்கெட் கீப்பர் இருப்பது எங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆட்டத்தில் முன்னேறுவதற்கான சிறந்த வழி எது என்பது குறித்து நாங்கள் எப்போதும் விவாதித்து வருகிறோம். அணி தேர்வில் ஏதாவது சமரசம் செய்யப்பட்டதா? யாருமே இப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலைப் பற்றிப் பேசவில்லை. அவர் கடந்த டி20 உலகக் கோப்பை அணியில் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கும் இந்த அணியில் இடம் இல்லை.

நீங்கள் வேறு 10 பெயர்களைப் பற்றி விவாதித்தாலும், நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள 15 பேர் கொண்ட அணி அதைவிட சிறந்ததாகத்தான் இருக்கும். வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தற்போது நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணி ஒரு வலிமையான அணி என்று உறுதியாக நம்புகிறோம்" என்றார்.