டிரம்பின் புதிய அறிவிப்பு.. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பீதி..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 10ஆம் தேதி சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்தை ஒரு ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இப்புதிய மாற்றம் ஜனவரி 20 அன்று அமலுக்கு வரும் என்றும் அறிவித்தார், இதை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு மிட்டர்ம் தேர்தலுக்கு முன்னதாக வந்துள்ளதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, மேலும் 2024 தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.
சாதாரண மக்களுக்கு நன்மை
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பொதுவாக 30 முதல் 45 சதவீதம் வரை வட்டியை வசூலிக்கின்றன. கட்டணம் செலுத்தாவிட்டால் இந்த வட்டி இன்னும் அதிகரிக்கும். தாமாதமாக செலுத்தும் தொகைக்கு அபராதமும் உள்ளது. இந்த நிலையின் டிரம்பின் 10 சதவீத வட்டி குறைப்பு திட்டம் அமலானால், கடன் சுமையால் தவிக்கும் அமெரிக்க நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். குறைந்த வட்டி காரணமாக கடன் திருப்பிச் செலுத்துவது எளிதாகும், மக்களின் நிதி அழுத்தம் குறையும்.
கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு சவால்
இந்த அறிவிப்பு கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு பெரிய அடியாக இருக்கும். டிரம்ப் அறிவித்தப்படி 10 சதவீதம் வட்டி வரம்பு விதிக்கப்பட்டால், நிறுவனங்களின் லாபம் பெரிய அளவில் குறையும். இதனால் பங்குச் சந்தையில் இந்நிறுவனங்களின் பங்குகளின் விலை பெரியளவில் வீழ்ச்சியடையலாம். அமெரிக்க நிதி துறையில் பெரும் பாதிப்பு ஏற்படலாம்.
இதுக்குறித்து வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் (Vanderbilt University) 2025 ஆய்வின்படி, கிரெடிட் கார்டு வட்டி 10 சதவீதமாக குறைக்கப்பட்டால், அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கிரெடிட் கார்டு கடன் தற்போது 1.21 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது.
அமெரிக்க மக்கள் அன்றாட செலவுகள் முதல் சிறு தொழில்களுக்கு கூட கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் கிரெடிட் கார்ட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 120 பில்லியன் டாலர் வட்டி மற்றும் 162 பில்லியன் டாலர் செயலாக்க கட்டணம் ஈட்டுகின்றன, இதில் 30 சதவீதம் முழுக்க முழுக்க லாபமாக மட்டுமே உள்ளது.
அரசியல் பின்னணி
இந்த அறிவிப்பு ஜனவரி 20 அன்று அமலாகும் என்று கூறப்பட்டாலும், இது இன்னும் சட்டமாக மாறவில்லை. டிரம்ப்-ன் அறிவிப்புக்கு சட்டரீதியாக அனுமதி மற்றும் அமலாக்கம் செய்யப்பட வேண்டும். ஜனவரி 20 டிரம்பின் இரண்டாவது பதவிக்கால ஆண்டு நிறைவு நாள். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் மிட்டேர்ம் தேர்தலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மிட்டர்ம் தேர்தல் என்றால் என்ன..?
அமெரிக்காவில் மிட்டர்ம் தேர்தல் (Midterm Election) என்பது அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் நடுவில் (அதாவது 2 ஆண்டுகளுக்குப் பிறகு) நடைபெறும் தேசிய அளவிலான தேர்தலாகும். ஏற்கனவே நியூயார்க் மேயர் தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்த நிலையில். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 100க்கும் மேற்பட்ட செனேட்டர்கள் என பல மாநில தலைவர்கள் வாக்கு அளிப்பார்கள். இதில் வெற்றி பெறுவது டிரம்ப் அரசுக்கு மிகவும் முக்கியம்.
ஏன் இது முக்கியம்?
இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் யாருக்கு அதிகாரம் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணமாக அதிபரின் கட்சி நாடாளுமன்றத்தில் இடங்களை இழந்தால், புதிய சட்டங்களை நிறைவேற்றுவது கடினமாகிவிடும். எதிர்க்கட்சி வெல்லும் பட்சத்தில் அதிபரின் திட்டங்களை தடுக்கலாம், பட்ஜெட்டை கட்டுப்படுத்தலாம், விசாரணைகளைத் தொடங்கலாம்.
வரலாற்று ரீதியாக அதிபரின் கட்சி இத்தகைய மிட்டர்ம் தேர்தலில் பெரும்பாலும் இடங்களை இழப்பது வழக்கமாகியுள்ளது. இதனாலேயே டிரம்ப் தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றி வருகிறார். மேலும் உலகின் பல நாடுகள் உடன் போர் அச்சத்தை உருவாக்கியிருக்கும் காரணத்தால் அமெரிக்க பொருளாதாரம், வேலைவாய்ப்பு சந்தை பாதிப்பு நிச்சயம் என்பதால் இத்தகைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.