காலை உணவாக ஓட்ஸ் - 30 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

காலை உணவாக ஓட்ஸ் - 30 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் செய்யப்படும் எளிய மாற்றங்கள், நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி, ஆரோக்கியமான காலை உணவு தேர்வுகளில் முதல் வரிசையில் இருப்பது 'ஓட்ஸ்'. காலை உணவாக பெரும்பாலானோர் எடுத்துக்கொள்ளும் ஓட்ஸ் அதன் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக பெயர்பெற்றது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதே காரணம்.

ஓட்ஸில் உள்ள முக்கிய அங்கமான பீட்டா-குளுக்கன் (Beta-Glucan) என்ற தனித்துவமான நார்ச்சத்து, பல்வேறு உடல்நலப் நன்மைகளுக்கு முக்கிய காரணமாகும். ஒரு மாதத்திற்கு உணவில் தினசரி ஓட்ஸை சேர்த்துக்கொள்வது, உடல் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க, ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என பல ஆய்வுகளில் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்துவது முதல் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது வரை, ஓட்ஸை வழக்கமாக உண்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அந்த வகையில், 30 நாட்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எடை மேலாண்மை: ஓட்ஸில் இயற்கையாகவே நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தினசரி உணவாக எடுத்துக்கொள்ளும் போது, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும். இதன் விளைவாக எடையை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நாள் முழுவதும் நிலையான வளர்சிதை மாற்றத்தையும் ஆற்றலையும் பராமரிக்க உதவுகிறது. தொப்பை கொழுப்பை குறைக்க முயற்சிப்பவர்கள் அன்றாட உணவில் ஓட்ஸ் சேர்த்துக்கொள்வது சிறந்த தேர்வாகும்.

மலச்சிக்கலை தடுக்கிறது: செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களில் பிரச்சனையை அனுபவிப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம் என Systematic Review of the Effects of Oat Intake on Gastrointestinal Health என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. ஓட்ஸில் கரைக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளது. அவை மலத்தை மென்மையாக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இது குடல் இயக்கங்களை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. தொடர்ந்து ஓட்ஸ் உட்கொள்வது, சிறந்த குடல் பாக்டீரியாவை ஆதரிக்கவும் வீக்கத்தை (Inflammation) குறைக்கவும் பங்களிக்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்: ஓட்ஸில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலிபினால்கள் எனப்படும் நன்மை பயக்கும் தாவர சேர்மங்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான தமனிகளை ஆதரித்து இதயத்தில் அழுத்தத்தைக் குறைக்கிறது.

காலப்போக்கில், வழக்கமான ஓட்ஸ் நுகர்வு ரத்த அழுத்த அளவைக் குறைக்கவும் இதய நோய்களைத் தடுக்கவும் உதவும். சீரான வாழ்க்கை முறையுடன் அன்றாடம் ஓட்ஸ் சாப்பிடுவது நீண்டகால இதய ஆரோக்கியத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்: ஓட்ஸ் சாப்பிடுவது, இன்சுலின் அளவுகளில் திடீர் அதிகரிப்பை தடுக்கிறது மற்றும் நாள் முழுவதும் ரத்த சர்க்கரையை நிலையாக வைத்திருக்க உதவும். ஓட்ஸ் ஆரோக்கியமற்ற LDL கொழுப்பை குறைக்கவும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. DK Publishing ஜர்னலில் Heeling Foods என்ற தலைப்பில் வெளியான ஆய்வில், நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு, சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் சிறந்த தேர்வாகும்.