தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவா தூங்குறீங்களா? மறதி முதல் நீரிழிவு நோய் காத்திருக்கு
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் பலரும் வேலையின் காரணமாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவே தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். காபி குடித்துவிட்டு, சோர்வையும் தலைவலியையும் தாங்கிக்கொண்டு, விழித்திருக்க பலரும் பழகிவிட்டனர்.
ஆனால், நாள்பட்ட தூக்கமின்மை (Chronic Sleep Deprivation) ஆரோக்கியத்திற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரியவர்கள் தினசரி ஏழு மணி நேரம் அல்லது அதற்கும் மேல் தூங்குவது அவசியம் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவது உடலின் பல முக்கியமான அமைப்புகளை சீர்குலைத்து, நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அந்த வகையில், தினசரி இரவு ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குபவர்களை விட, ஐந்து முதல் ஆறு மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு நீரிழிவு அல்லது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகிறது என The Link Between Sleeping and Type 2 Diabetes என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
- குறைவான தூக்கம் அதிக உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் உடல் பருமனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில், 27 வயதிற்குள் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கியவர்களுக்கு, அதிக BMI இருக்க 7.5 மடங்கு அதிக வாய்ப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
- ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது, திருப்திப்படுத்தும் ஹார்மோனான லெப்டின் அளவை குறைத்து, பசியைத் தூண்டும் ஹார்மோனான கிரெலின் அளவு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இது அதிகப்படியான பசி மற்றும் கொழுப்பு சேமிப்பிற்கு வழிவகுக்கிறது.
- சுமார் 4,000 ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கியவர்களுக்கு, ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கியவர்களை விட, தமனி அடைப்பு (ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிதல்) ஏற்பட 27% அதிக வாய்ப்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.
- ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உயர் ரத்த அழுத்தம், மன அழுத்த ஹார்மோன்களின் அதிகரித்த அளவு, மற்றும் அழற்சி குறிகாட்டிகளை அதிகரிக்கிறது. பொதுவாக, தூக்கத்தின் போது இதயம் மற்றும் தமனிகள் ஓய்வெடுத்து, பழுதுபார்க்கப்பட வேண்டும். இந்த ஓய்வைக் குறைக்கும்போது, பழுதுபார்க்கும் செயல்முறை முழுமையடையாமல், ரத்தக் குழாய்கள் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கின்றன.
- ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்கும் நபர்களுக்கு, மூளையில் நச்சுக்கள் குவிவது, வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவது குறைவது மற்றும் பிற்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது டிமென்ஷியா (மறதி நோய்) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என Lack of sleep in middle age may increase dementia risk என்ற தலைப்பில் NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.
- கவனச் சிதறல், நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன் மற்றும் எதிர்வினை நேரம் ஆகியவை குறுகிய காலத்திலேயே பாதிக்கப்படுகின்றன. நாள்பட்ட குறைந்த தூக்கத்திற்கும் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலைக் கோளாறுகளுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது.
- தூக்கத்தின்போதுதான் உடல் வளர்ச்சி ஹார்மோனை வெளியிடுகிறது, திசுக்களைப் பழுதுபார்க்கிறது, தைராய்டு செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. தூக்கத்தைக் குறைக்கும்போது, இந்த பழுது மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகள் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, தைராய்டு ஹார்மோன் அளவுகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு சீர்குலைக்கப்படலாம். இது காலப்போக்கில் தசைகள் குறைதல், எலும்பு ஆரோக்கியம் குறைதல், மெதுவாகக் குணமடைதல் மற்றும் ஒட்டுமொத்த உடல் சோர்வுக்கு வழிவகுக்கும்.