கரோனா பாதித்த கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு - சர்வதேச ஆய்வில் தகவல்!
கர்ப்ப காலத்தில் கோவிட்-19 தொற்றுக்கு ஆளான தாய்மார்களின் குழந்தைகளில் 16.3 சதவீதம் பேருக்கு நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆட்டிசம் (Autism), பேச்சுத் தாமதம் (Speech Delays), மற்றும் வளர்ச்சி தாமதம் (Motor Disorders) போன்ற நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுகாதாரம் மற்றும் பொருளதார ரீதியாக பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்காக மக்கள் உயிர்களை இழந்தனர். உயர்தர மருத்துவம், தடுப்பூசி கண்டுபிடிப்புகளின் காரணமாக கரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த பாதிப்பு ஏற்பட்டு 6 ஆண்டுகள் ஆனாலும் இப்போது வரையிலும் கரோனா ஏற்படுத்திய பொருளாதார மற்றும் சுகாதார பாதிப்புகளில் இருந்து பலரும் முழுமையாக மீளவில்லை. கரோனா பாதிப்பு பல தரப்பட்ட மக்களை வாட்டி வதைத்த நிலையில், அடுத்த தலைமுறைகளாக அப்போது இருந்த கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தைகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு தொடர்பான ஆய்வுகள் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கு நரம்பியல் பாதிப்பு:
அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள மாஸ் ஜெனரல் பிரிகாம் (Mass General Brigham) என்ற முன்னணி கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 'Obstetrics & Gynecology' என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக, மார்ச் 2020 முதல் மே 2021 வரையிலான காலக்கட்டத்தில் குழந்தைகளை பெற்றெடுத்த 18,124 தாய் மற்றும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் கண்காணிக்கப்பட்டன. இவர்களில், 861 தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் SARS-CoV-2 (கோவிட்-19) தொற்றுக்கு ஆளானவர்கள். இந்த குழந்தைகள் மூன்றாம் வயதை அடைந்தபோது அவர்களின் வளர்ச்சிப் பரிசோதனை முடிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் வெளியான சில முக்கிய விவரங்கள் பின்வருமாறு.
- கர்ப்ப காலத்தில் கோவிட்-19 தொற்றுக்கு ஆளான தாய்மார்களின் குழந்தைகளில் 16.3 சதவீதம் பேருக்கு நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது
- கோவிட் பாதிப்பு இல்லாத கர்ப்பிணிகளின் குழந்தைகளில் இந்த குறைபாடு கண்டறியப்பட்ட சதவீதம் 9.7 மட்டுமே
- வயது மற்றும் ஏற்கனவே உள்ள உடல்நலக் குறைபாடுகள் போன்ற மற்ற காரணிகளைச் சரிசெய்த பிறகு, கர்ப்பிணித் தாய்மார்களின் கோவிட்-19 தொற்றுக்கும் குழந்தைகளில் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படுவதற்கும் இடையிலான தொடர்பு, 29 சதவீதம் அதிக வாய்ப்பை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது
அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார்?
மாஸ் ஜெனரல் பிரிகாமில் உள்ள மகப்பேறு-கரு மருத்துவம் மற்றும் ஆய்வின் மூத்த ஆசிரியரான டாக்டர் ஆண்ட்ரியா எட்லோ, "கர்ப்ப காலத்தில் ஏற்படும் கோவிட்-19, மற்ற பல தொற்றுகளைப் போலவே, தாய்க்கு மட்டுமின்றி குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தாயின் நோயெதிர்ப்பு சக்தி காரணம்?
கருவில் வளரும் சிசுக்கு ஏற்படும் பாதிப்புக்கு காரணம், வைரஸ் நேரடியாக கருவை அடைவதால் மட்டும் இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். மாறாக, கோவிட் தொற்றுக்கு எதிராக தாயின் உடலில் ஏற்படும் அதிகப்படியான நோயெதிர்ப்பு செயல்பாடு (Maternal Immune Response) மற்றும் வீக்கம் (Inflammation) ஆகியவை, கருவின் மூளை வளரும் சூழலை நுட்பமாக மாற்றுவதே இந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.
உண்மையில், கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகளுக்கும் பின்னர் ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கும் உள்ள தொடர்பு புதிதல்ல. ஃப்ளூ, ரூபெல்லா (தட்டம்மை) மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பிற தொற்றுகளும் ஆட்டிசம் அல்லது வளர்ச்சிக் குறைபாடுகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த ஆபத்து குறைவே!
இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியாக இருந்தாலும், ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான அம்சத்தை வலியுறுத்துகிறார்கள். "தொற்று இந்த குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கும் என்றாலும், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த ஆபத்து குறைவாகவே உள்ளது" என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், இந்த ஆபத்து குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். ஆரம்ப காலத்திலேயே பரிசோதனை செய்து, தேவையான ஆதரவையும் developmental support-ஐயும் வழங்கினால், பாதிக்கப்பட்ட குழந்தையின் நிலைமையை மோசமாக்காமல் பார்த்துக்கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு நடைபெற்ற காலத்தில் பெரும்பாலான தாய்மார்கள் தடுப்பூசி போடாதவர்களாக இருந்ததால், இந்த கண்டுபிடிப்புகள் கர்ப்ப காலத்தில் கோவிட்-19 தொற்று ஏற்படுவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.