மாடுகளுக்கு மைக்ரோ சிப் - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அவற்றுக்கு மைக்ரோ சிப் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 118 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கியமாக, தீர்மானம் 45-ல் சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்துகளின் பெயர் மாற்றத்திற்கு குடியிருப்பு பயன்பாட்டில் இருந்தால் கட்டணம் 500 ரூபாய் எனவும், குடியிருப்பு அல்லாத பயன்பாட்டு நிலத்திற்கு 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாடுகளுக்கு மைக்ரோ சிப்
அதே போல, தீர்மானம் எண் 69-ல், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாடுகளை வளர்த்து வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் அனைத்து மண்டலங்களிலும் உள்ளனர். பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2,875 மாடுகள் அவற்றின் உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மாடுகள் உரிய இடவசதி இன்றி தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு, பொது சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதனை தடுக்க 15 மண்டலங்களுக்கும் பிரத்யேக மாடு பிடிக்கும் வாகனங்கள் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு வாகனத்திலும் தலா 5 மாடுகள் பிடிக்கும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் தொழுவத்தில் அடைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாட்டிற்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு, அவை மீண்டும் சாலைகளில் திரிய விடக் கூடாது என்ற நிபந்தனையுடன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
இவ்வாறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்வு காண மாட்டின் உரிமையாளர்களுக்கு அவர்களின் மாடுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இடங்கள் ஒதுக்கப்பட்டு நவீன மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த நவீன மாட்டுத் தொழுவங்கள் மண்டலங்கள் 1, 2, 3, 5, 8 மற்றும் 9 ஆகிய மண்டலங்களில் செயல்பாட்டில் உள்ளன. மேலும், மற்ற மண்டலங்களில் நவீன மாட்டுத் தொழுவங்களின் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்த தொழுவங்களில் கால்நடை ஒன்றிக்கு தினசரி 10 ரூபாய் வீதம் மாடுகளின் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்பட உள்ளது.
எனவே, தற்போது சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் மாடுகளின் எண்ணிக்கையை அறியவும், மாடுகள் வளர்ப்பினை முறைப்படுத்தவும் அதற்கான திட்டங்களை உருவாக்கவும் மாட்டு உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்க வேண்டியுள்ளது. அதன்படி மாட்டின் உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிமம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை இணையதளத்திருந்து (GCC Website) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாட்டின் உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களில் உள்ள மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்கள், கோட்ட சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கள ஆய்வு செய்த பின் ரூ.100 கட்டணம் பெற்றுக் கொண்டு, மாட்டின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்குவார்கள்.
உரிமம் வழங்கப்படும் போது ஒவ்வொரு மாட்டிற்கும் மைக்ரோ சிப் செலுத்தி இதன் மூலம் மாட்டின் உரிமையாளர்களின் பெயர், முகவரி மாடுகளின் விவரம் ஆகியவற்றை ஆவணப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெறுவதற்காக 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு 18.3.2026 க்குள் உரிமம் பெற காலக்கெடு அளிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக 25 ஆயிரம் மைக்ரோ சிப் மற்றும் 25 மைக்ரோ சிப் ரீடர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.