விஜய் எனது தம்பி... நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி
நடிகர் விஜய்யால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பில்லை. ஆனால் நடிக்க மாட்டார் என்று கூறியது எனக்கு பாதிப்பு. ஏனென்றால் நான் அவரை என் தம்பியாக பார்க்கிறேன் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு விழா நடைபெற்றது. நடிகை குஷ்பு குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததோடு, மேடையிலேயே பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் மற்றும் லலிதா சண்முகத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடந்தேறியது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகை குஷ்பு, பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர் சந்தித்த நடிகை குஷ்பு தேர்தல் குறித்தும், விஜய்யின் அரசியல் குறித்தும் பேசினார். அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின் களச் சூழல் எப்படி இருக்கிறது? என்று கேட்டதற்கு, “பீகாரில் தேர்தல் நடந்த போது பாஜக வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால் பாஜக தனித்தே வெற்றி பெற்றது. அதே போல் தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்றார்.
அவரிடம் விஜய்யால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பா? வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்று கேட்டதற்கு, நடிகை குஷ்பு, “நடிகர் விஜய்யால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பில்லை. ஆனால் இனிமேல் நடிக்க மாட்டார் என்று கூறியது எனக்கு பாதிப்பு. ஏனென்றால் நடிகர் விஜய்யை நான் அரசியல்வாதியாக பார்க்கவில்லை. என்னுடைய தம்பியாக பார்க்கிறேன். விஜய் எங்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் அல்லது வேறு எங்கு இருந்தாலும் அவருக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்றார்.
அவர் முதல்வராவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “அவர் முதல்வராக வருவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று வாழ்த்தினார்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, “பா.ரஞ்சித் ஏன் அப்படி பேசினார் என்று எனக்கு தெரியாது. அவருக்கு விருது கிடைக்கவில்லையே என்று அப்படி பேசி இருப்பார்” என்றார்.
வருகிற தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என்று கேட்டதற்கு, அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று கூறிவிட்டு நடிகை குஷ்பு சென்றார்.