''நடிகர் ஜெயராம் சாட்சியாக சேர்க்கப்பட வாய்ப்பு?'' - சூடு பிடிக்கும் சபரிமலை தங்கம் கொள்ளை விவகாரம்

''நடிகர் ஜெயராம் சாட்சியாக சேர்க்கப்பட வாய்ப்பு?'' - சூடு பிடிக்கும் சபரிமலை தங்கம் கொள்ளை விவகாரம்

சபரிமலை தங்கம் கொள்ளை விவகாரத்தில், நடிகர் ஜெயராம் சாட்சியாக சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிலைகளின் பராமரிப்பு பணிக்கு தலைமை தாங்கிய உன்னி கிருஷ்ணன், சபரிமலையில் பணியாற்றிய நிர்வாக அதிகாரி முராரி பாபு, செயல் அலுவலர் சுதீஷ்குமார், திருவாபரணம் ஆணையர் பைஜூ, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் ஆணையர் மற்றும் தலைவர் வாசு உள்ளிட்ட சுமார் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழகத்தில் இருந்தும் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் தங்க தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

மேலும் துவாரக பாலகர் சிலை பராமரிப்பு பணிக்காக சென்னை கொண்டு வரப்பட்ட நேரத்தில் அதை காட்சிப்படுத்தி பூஜை ஒன்று நடத்தப்பட்டது. அந்த பூஜையில் பிரபல நடிகர் ஜெயராம் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். மேலும் அவருக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

மேலும், சிலை தன்னுடைய வீட்டிற்கும் கொண்டு வரப்பட்டு பூஜை செய்ததாகவும், ஆனால் உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் எவ்விதமான தொடர்பும் இல்லையெனவும் அவருடன் எந்த ஒரு பண பரிமாற்றமும் தான் நடத்தவில்லை எனவும், அவர் செய்த மோசடி குறித்து எனக்கு எந்த வித தகவலும் தெரியாது என்றும் அதிகாரிகளிடம் ஜெயராம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக சபரிமலை சென்று வருவதால் உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், சன்னிதான கதவுகளுக்கான தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்று அவர் கூறியுள்ளதாகவும் நடிகர் ஜெயராம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் கொள்ளை வழக்கில் ஜெயராம் சாட்சியாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.