4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
'டிட்வா' புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளில் உருவான ‘டிட்வா’ புயல் (ditwah cyclone), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. தற்போது, புயல் சென்னை கடற்கரையை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று (டிச.1) காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பும், சென்னைக்கு ஆரஞ்சு அலர்டும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.2) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அந்த வகையில், மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே தொடர் மழை பெய்து வருவதால், நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
இதனிடையே, நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எந்த மாவட்டங்களில் மழை காரணமாக கல்லூரிகளுக்கு 02.12.2025 அன்று அரசு விடுமுறை அறிவித்திருக்கிறதோ, அந்த மாவட்டங்களில் 02.12.2025 அன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த மாவட்டங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.