பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்த இந்திய அணி வீரர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த காணொளி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் நான்கு டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியிலும், நியூசிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று இரவு திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால், அவரை வரவேற்க விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். அப்போது அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சுவின் பாதுகாவலர் போல் செயல்பட்ட காணொளி வைரலாகி வருகிறது.
இந்திய அணி சாமி தரிசனம்
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். இதில் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் பயிற்சிக்காக மைதானத்திற்குத் திரும்பும் இந்திய அணி வீரர்கள் மாலை 4:30 மணி முதல் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இந்த போட்டியை முன்னிட்டு விமான நிலையத்திலிருந்து ஹோட்டல்கள் மற்றும் மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
சஞ்சு சாம்சன் , இந்த தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறிவிட்டார். அதன்படி முதல் டி20 போட்டியில் 10 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 6 ரன்களையும், மூன்றாவது போட்டியில் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்த சஞ்சு சாம்சன், 4ஆவது டி20 போட்டியில் ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் தற்போது சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷனுக்கு அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன. இது தற்சமயம் சஞ்சு சாம்சனுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்த போட்டி சஞ்சு சாம்சனை பொறுத்த வரையிலும் வாழ்வா? சாவா? ஆட்டமாக உள்ளது. ஒருவேளை அவர் இந்த போட்டியிலும் சோபிக்க தவறினால், பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழப்பது உறுதி.
அணி விவரம்
- இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி, இஷான் கிஷன், ரவி பிஷ்னோய்.
- நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜக்காரி ஃபால்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, லோக்கி ஃபெர்குசன், இஷ் சோதி, ஃபின் ஆலன்.