நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிப்பு... நீதிமன்றம் சொன்னது என்ன?

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிப்பு... நீதிமன்றம் சொன்னது என்ன?

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இன்று (டிச.8) விடுவிக்கப்பட்டார்.

8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 8) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை குற்றங்களில் இருந்து விடுவித்தார். ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்தார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்.எஸ். சுனில் எனும் 'புல்சர் சுனில்'. இரண்டாவது குற்றவாளி மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளி பி. மணிகண்டன், நான்காவது குற்றவாளி வி.பி. விஜீஷ், ஐந்தாவது குற்றவாளி எச்.சலீம் என்கிற வடிவால் சலீம், 6-வது குற்றவாளி பிரதீப், 7-வது குற்றவாளி சார்லி தாமஸ், ஒன்பதாவது குற்றவாளி சனில் குமார் என்கிற மேஸ்திரி சனில், மற்றும் பதினைந்தாவது குற்றவாளி சரத் நாயர் ஆவர்.

பின்னணி என்ன? - பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.